ஆஸி.தொடரில் விராட், ரோகித் 3 சதங்கள் அடித்தாலும் 2027 உலகக்கோப்பையில்...- அகர்கர்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நாளை நடக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் களமிறங்க உள்ளது.
அவரது தலைமையில் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட இருவரும் ஏறக்குறைய 7 மாதம் கழித்து மீண்டும் சர்வதேச களத்திற்கு திரும்பி இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் விராட் மற்றும் ரோகித் சர்மாவுக்கு இது கடைசி சர்வதேச தொடராக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனெனில் தங்களது கெரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் இருவரும் 2027 உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும் என்பதே அவர்களுடைய கனவாகவும் விருப்பமாகவும் இருக்கிறது.
அந்த தொடரில் விளையாட இருவரும் பார்மில் இருப்பது அவசியம். ஆனால் அதற்கு முன் அவர்களை கழற்றி விட இந்திய அணி நிர்வாகம் தயாராகியுள்ளது. அதனாலேயே ரோகித் சர்மாவை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையிலான புதிய அணியை உருவாக்கத் தொடங்கியுள்ளது.
இதனால் அவர்கள் இருவரும் 2027 ஒருநாள் உலககோப்பை தொடரில் விளையாடுவார்களா? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக சில கருத்துகளை கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அகர்கர், “ரோகித் சர்மா, விராட் கோலியை ஒவ்வொரு போட்டியிலும் மதிப்பிடுவது சரியானதாக இருக்காது. அவர்கள் விளையாட ஆரம்பித்தவுடன் அவர்களது ஆட்டம் குறித்து மதிப்பீடு செய்வோம். ஆனால் அது அணியில் இடத்தை உறுதி செய்வதற்கான தகுதி தேர்வாக இருக்காது. ஆஸ்திரேலிய தொடரில் அவர்கள் ரன் குவிக்காவிட்டால் நீக்கப்படுவார்கள் என்றோ, அதே நேரத்தில் ஆஸ்திரேலிய தொடரில் 3 சதங்கள் அடித்தால் 2027-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்றோ அர்த்தம் கிடையாது” என்று கூறினார்.






