இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா

கோப்புப்படம்
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
வொர்செஸ்டர்,
இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி வொர்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 363 ரன்கள் குவித்தது.
அதிரடியில் கலக்கிய சூர்யவன்ஷி வெறும் 78 பந்துகளில் 143 ரன்கள் (10 சிக்சர்கள், 13 பவுண்டரிகள்) அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேக் ஹொம் 4 விக்கெட்டுகளும், செபாஸ்டியன் மோர்கன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 364 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 45.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 308 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ராக்கி பிளிண்டாப் 107 ரன் எடுத்தார்.
இந்தியா தரப்பில் நமன் புஷ்பாக் 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.