பாகிஸ்தான் - இலங்கை ஒருநாள் தொடர்: போட்டிகள் ஒத்திவைப்பு.. காரணம் என்ன..?

பாகிஸ்தான் - இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற இருந்தது.
ராவல்பிண்டி,
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த சூழலில் இஸ்லாமாபாத்தில் கோர்ட்டு வளாகத்தில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 12 பேர் பலியானார்கள். இதன் காரணமாக பதற்றமடைந்த சில இலங்கை வீரர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு தாயகம் திரும்ப விரும்புவதாக தங்களது கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர். இதனால் இந்த தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவியது.
இந்த பதற்றமான சூழலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கான இலங்கை தூதர் பிரெட் செனவிரத்னே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியை சந்தித்து பாதுகாப்பு பிரச்சினை குறித்து ஆலோசித்தார். அப்போது அவர் இலங்கை வீரர்களுக்கு அரசு விருந்தினர்கள் போல் உயரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்தார். இதனைதொடர்ந்து இந்த தொடர் நடைபெற உள்ளது.
இருப்பினும் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெறும் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி இன்று நடைபெற இருந்த 2-வது போட்டி நாளைக்கும் (14-ம் தேதி), 15-ம் தேதி நடைபெற இருந்த 3-வது மற்றும் கடைசி போட்டி 16-ம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளன.






