சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி


சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி
x

image courtesy:twitter/@BCCIdomestic

டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக யாஷ் துள் 71 ரன்கள் அடித்தார்.

ஆமதாபாத்,

18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்கும் 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்குள் நுழையும். ‘பிளேட்’ பிரிவில் கலந்து கொண்டுள்ள 6 அணிகள் இடையிலான ஆட்டம் புனேயில் நடக்கிறது.

இதில் ஆமதாபாத்தில் இன்று நடந்த ஒரு ஆட்டத்தில் (டி பிரிவு) தமிழ்நாடு - டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த தமிழக அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன அமித் சாத்விக் - துஷார் ரஹேஜா சிறப்பாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. இருவரும் அரைசதம் கடந்த நிலையில் சாத்விக் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சாய் சுதர்சன் 13 ரன்களிலும், ஷாருக்கான் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய

துஷார் ரஹேஜா 72 ரன்களில் நடையை கட்டினார்.

இதனால் இறுதி கட்டத்தில் தமிழக அணியின் ரன் வேகம் குறைந்தது. பின்னர் வந்த வீரர்களில் ஜெகதீசன் (13 ரன்), சோனு யாதவ் (5 ரன்) மற்றும் ராஜ் குமார் (9 ரன்) யாரும் நிலைக்கவில்லை.

20 ஓவர்கள் முடிவில் தமிழக அணி 7 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் அடித்தது. டெல்லி தரப்பில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் பிரியன்ஷ் ஆர்யா வெறும் 15 பந்துகளில் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன யாஷ் துள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த நிதிஷ் ராணா 34 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யாஷ் துள் 71 ரன்களில் அவுட்டானார். இறுதி கட்டத்தில் ஆயுஷ் பதோனி அதிரடியாக விளையாட (41 ரன்கள்) டெல்லி அணி வெற்றியை நோக்கி பயணித்தது.

அவர் ஆட்டமிழந்ததும் வெற்றி தமிழக அணி பக்கம் திரும்புவது போல் தெரிந்தது. இருப்பினும் ஹிம்மத் சிங் 4 பந்துகளில் 11 ரன்கள் அடித்து டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 203 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழக அணி தரப்பில் சோனு யாதவ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

1 More update

Next Story