மகளிர் உலகக்கோப்பை: வங்காளதேசத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

Image Courtesy : @cricketworldcup
இங்கிலாந்து அணி 46.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது.
கவுகாத்தி,
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் அசாமின் கவுகாத்தியில் இன்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, வங்காளதேசம் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, வங்காளதேச தொடக்க வீராங்கனைகளாக ரூப்யா ஹைதர், ஷார்மின் அக்தர் களமிறங்கினர். ஹைதர் 4 ரன்னிலும், அக்தர் 30 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த கேப்டன் சுல்தானா ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய சொபானா பொறுப்புடன் ஆடி 60 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த வீராங்கனைகள் இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் வங்காளதேசம் 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ரெபயா கான் 27 பந்துகளில் 43 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வீராங்கனை சோபியா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் ஏமி ஜோன்ஸ் 1 ரன்னிலும், டாமி பேமவுண்ட் 13 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
அடுத்து களமிறங்கிய ஹீதர் நைட் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார். சற்று நிதானமாக ஆடிய கேப்டன் நாட் சிவர்-பிரண்ட் 32 ரன்களில் கேட்ச் ஆனார். அலீஸ் கேப்சி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். சார்லட் டீன் 27 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 46.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.






