"உலகை ஆளப்போகும் சிங்கப்பெண்ணே.. " - வினேஷ் போகத்துக்கு பஜ்ரங் புனியா புகழாரம்


உலகை ஆளப்போகும் சிங்கப்பெண்ணே..  - வினேஷ் போகத்துக்கு பஜ்ரங் புனியா புகழாரம்
x
தினத்தந்தி 7 Aug 2024 2:20 AM GMT (Updated: 7 Aug 2024 3:46 AM GMT)

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி சுற்றை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார்.

புதுடெல்லி,

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நேற்று களம் புகுந்தார். தனது முதல் சுற்றில், முந்தைய ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவரும், 4 முறை உலக சாம்பியன் மற்றும் ஆசிய விளையாட்டு சாம்பியனுமான ஜப்பானின் யு சுசாகியை எதிர்கொண்டார்.

6 நிமிடங்கள் கொண்ட இந்த பந்தயத்தில் தொடக்கத்தில் அவரது கையே ஓங்கி இருந்தது. முடிவில் 3-2 என்ற கணக்கில் சுசாகியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். சர்வதேச போட்டியில் தொடர்ச்சியாக 82 ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறுநடை போட்ட சுசாகியின் பேராதிக்கத்துக்கு வினேஷ் முற்றுப்புள்ளி வைத்தார்.

இதைத் தொடர்ந்து கால்இறுதியில் வினேஷ் போகத், ஐரோப்பிய முன்னாள் சாம்பியனான உக்ரைனின் ஒக்சானா லிவாச்சை எதிர்கொண்டார். ஒக்சானா கடும் சவால் அளித்த போதிலும் அவரை 7-5 என்ற புள்ளி கணக்கில் சாய்த்தார்.

இரவில் அரங்கேறிய அரைஇறுதியில் வினேஷ் போகத், கியூபாவின் லோபஸ் யுஸ்னேலிஸ் குஸ்மேனை எதிர்கொண்டார். முடிவில் வினேஷ் போகத் 5-0 என்ற புள்ளி கணக்கில் லோபசை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி சுற்றை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் பெற்றார்.

இந்நிலையில் உலகை ஆளப்போகும் சிங்கப்பெண் என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பஜ்ரங் புனியா புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில், "வினேஷ் போகத் இன்று நடந்த போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று இந்தியாவின் சிங்கப் பெண்ணாக உருவெடுத்துள்ளார். 4 முறை உலகச் சாம்பியன், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனையும் தோற்கடித்துள்ளார். காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனையும் தோற்கடித்தார். ஆனால், ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தப் பெண் தன் சொந்த நாட்டிலேயே அடித்து உதைக்கப்பட்டு, தெருக்களில் தரத்தரவென இழுத்துச் செல்லப்பட்டார். இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்" என்று அதில் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

அரியானாவைச் சேர்ந்த 29 வயதான வினேஷ் போகத்துக்கு இது 3-வது ஒலிம்பிக்காகும். முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில் ஏமாற்றத்தை சந்தித்த அவர் இந்த முறை இந்திய முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனுக்கு எதிராக மாதக் கணக்கில் போராட்டம் நடத்தியதால் நிறைய இன்னல்களை சந்தித்தார். பல்வேறு தடைகளை தாண்டி ஒலிம்பிக் போட்டிக்கு வந்த அவர், இப்போது பதக்கத்தை உறுதி செய்து ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகிழ்ச்சியை பரிசளித்துள்ளார்.


Next Story