சென்னைக்கு நடுவே 116 ஏக்கர் பூங்கா காணாமல் போன கதை!


சென்னைக்கு நடுவே 116 ஏக்கர் பூங்கா காணாமல் போன கதை!
x

சென்னையின் நடுப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பூங்கா இருந்தது என்று சொன்னால் இப்போது பலரும் நம்ப மாட்டார்கள்.

எக்கச்சக்க மரங்கள், உயிரியல் பூங்கா, 12 ஏரிகள், படகு சவாரி என பசுமையான பூங்காவாக இருந்தது, இப்போது நாம் காணும் பார்க் டவுன். அதனால் தான் இந்த இடத்திற்கு பார்க் டவுன் என்ற பெயரும் வந்தது.

காலப்போக்கில் உருமாறி அந்த மாதிரியான இடம் இருந்ததற்கான அடையாளமே தெரியாமல் நெருக்கமான குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்களுடன் நெரிசல் அதிகமிக்க பகுதியாக காட்சி அளிக்கிறது. தற்போது பூங்கா இருந்ததற்கான ஆதாரமாக மீதம் இருப்பது ரெயில்வே ஸ்டேஷனில் உள்ள அந்த பெயர் பலகை மட்டுமே.

மக்கள் பூங்கா

1859-ம் ஆண்டு, மெட்ராஸ் கவர்னராக இருந்த `சர்.சார்லஸ் ட்ரெவெலியன்' சென்னைக்கு நடுவில் ஒரு பெரிய பூங்கா கட்டமைத்தால், நடுத்தர மக்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் என்று நினைத்தார். அரசாங்கத்திடம் அனு மதி பெற்று கட்டுமான பணியை தொடங்கினார். அந்த பூங்கா 1861-ம் ஆண்டு 116 ஏக்கரில் `மக்கள் பூங்கா'வாக செயல்பாட்டுக்கு வந்தது. எக்கச்சக்க மரங்கள், ஐந்தரை மைலுக்கு நடைபாதை, உயிரியல் பூங்கா, 12 ஏரிகள், படகு சவாரி என மெட்ராஸின் நுரையீரல் என்று சொல்லும் அளவுக்கு பசுமையான பூங்காவாக இருந்தது.

அப்போது சென்னை அருங்காட்சியகத்தில் பத்தாண்டுகளாக இயங்கி வந்த உயிரியல் பூங்கா இந்த மக்கள் பூங்காவுக்கு மாற்றப்பட்டது. ஆப்பிரிக்க சிங்கம் முதல் அசாம் காண்டாமிருகம் வரை ஆயிரக்கணக்கான உயிரினங்கள் இந்த மக்கள் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

விக்டோரியா ஹால்

விக்டோரியா மகாராணியின் 50-ம் ஆண்டு பொன்விழா வந்தது. இதன் நினைவாக இந்தப் பூங்காவிற்கு நடுவில் விக்டோரியா ஹால் ஒன்று கட்டப்பட்டது. அங்கு நடன நிகழ்ச்சிகள், மலர்க் கண்காட்சி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கள் கொண்டாடப்பட்டது. 1950-ம் ஆண்டு வரை மலர்க்கண்காட்சிகள் தொடர்ந்து நடந்திருக்கிறது.

சென்டிரல் ரெயில்வே ஸ்டேஷன்

பின்னர் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே, குட்டி குட்டி கடைகளும் முளைத்தன. இந்த இடத்தை `நியூ டவுன்' என்றும் `பார்க் டவுன்' என்றும் மக்கள் அழைக்கத் தொடங்கினர். அப்போது மெட்ராஸில் இருந்த ஜார்ஜ் டவுன் பிரிட்டிஷ்காரர்கள் அதிகம் வாழும் குடியிருப்பாகவும், பார்க் டவுன் ஆங்கிலோ இந்தியர்கள் அதிகம் வாழும் குடியிருப்பாகவும் இருந்தது. இந்த பார்க் டவுனில் 1873-ம் ஆண்டில் சென்னையின் இரண்டாவது ரெயில் நிலையம் கட்டப்பட்டது. அதுதான் இப்போதைய `சென்டிரல் ரயில்வே ஸ்டேஷன்'.

பாம்ஹேம் சந்தை

இப்படி மக்கள் பூங்காவில் ஒவ்வொரு கட்டிடமாக வர, 1900-ம் ஆண்டு ஒரு பெரிய வணிக வளாகம் பூங்காவிற்குள் கட்டமைக்கப்பட்டது. அது தான் மூர் மார்க்கெட். 1790-ம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை மூன்று லட்சம். பாப்ஹேம் என்ற வழக்கறிஞர் அங்கு வசிக்கும் மக்கள் தொழில் செய்வதற்கு ஏதுவாக அவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு சந்தையைக் கட்டித்தந்தார். அந்த சந்தைக்குப் பெயர் `பாப்ஹேம் சந்தை'.

மூர்மார்க்கெட்

இடநெருக்கடியாலும், ரெயில் நிலையத்திற்கு அருகே சந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்பதாலும் இந்தச் சந்தையானது மக்கள் பூங்காவிற்கு மாற்றப்பட்டது. சர் ஜார்ஜ் மூர் என்கிற லெப்டினன்ட் ஜெனரல் கட்டியதால் இதற்கு பெயர் `மூர் மார்க்கெட்' என அழைக்கப்படுகிறது. 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக இருந்த இந்த மூர் மார்க்கெட் இப்போதைய ஷாப்பிங் மால்களுக்கெல்லாம் முன்னோடி.

நேரு ஸ்டேடியம்

80 வருடங்களுக்கும் மேலாக பரபரப்பாக இயங்கிவந்த இந்த மார்க்கெட் ஒரு துயர சம்பவத்தைச் சந்தித்தது. 1985-ம் ஆண்டு ஓர் இரவில் மூர் மார்க்கெட் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் இந்தக் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு ரெயில்வே அலுவலகமாகவும் இப்போதைய புறநகர் ரெயில் நிலையமாகவும் செயல்படுகிறது. இங்கிருந்த மூர் மார்க்கெட் பக்கத்தில் இருந்த புதிய வளாகத்துக்கு மாற்றப்பட்டது.

100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த மக்கள் பூங்கா இடநெருக்கடி காரணமாக 1985-ம் ஆண்டு வண்டலூருக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து மீதம் இருந்த கொஞ்ச நிலமும் 1993-ம் ஆண்டு நேரு ஸ்டேடியமாக மாறிப்போனது.

116 ஏக்கரில் சென்னையின் நுரையீரலாக இருந்து சென்னை மக்களை சந்தோசப்படுத்திய மக்கள் பூங்கா, இன்று கான்கிரீட் கட்டிடங்களுக்கு நடுவில் காணாமல் போய்விட்டது. வெறும் பெயரில் மட்டும் 'பார்க்' இருக்கும் 'பார்க் டவுன்' ரெயில் நிலையம் 160 ஆண்டுகால வரலாற்றின் கடைசி சாட்சி.


Next Story