சினிமாவில் இத்தனை காலம் நடிப்பது மகிழ்ச்சி - நடிகை தமன்னா


சினிமாவில் இத்தனை காலம் நடிப்பது மகிழ்ச்சி - நடிகை தமன்னா
x

தென்னிந்திய படங்களில் மட்டுமன்றி இந்தி யிலும் பெயரும் புகழும் பெற்ற நடிகை தமன்னா. 18 வருடங் களாக சினிமாவில் நீடிக்கிறார். நகை வியாபாரத்தில் இறங்கியும் வெற்றிகரமாக சாதித்துள்ளார். அரசு திட்டங்களுக்கு தூதுவராக இருக்கிறார். இவரை `மில்கி பியூட்டி' என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். தமன்னாவின் மனம் திறந்த பேட்டி.

உங்களுக்குப் பிடித்த படங்கள்?

இந்தியில் `மொகல் ஏ ஆசம்', `தில் தோ பாகல் ஹை', `தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே' இந்த மூன்று படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். எத்தனை முறை பார்த்தேன் என்று கணக்கே இல்லை. ஹாலிவுட்டில் `டைட்டானிக்', `இன் ப்ரோக்கோ விச்' படங்கள் எனது சினிமா லைப்ரரியில் டாப்பில் இருக்கும்.

உங்களுக்குப் பிடித்த உணவு வகைகள்?

சிறு வயது முதலே நான் சாதம் சரியாக சாப்பிடுவது இல்லை என்று எனது அம்மா அடிக்கடி கோபப்படுவார். இப்போது கூட மதிய உணவு சாப்பிடுவது இல்லை. இது என் அம்மாவிற்கு தெரியாது. படப்பிடிப்பில் மதிய உணவை கட் செய்துவிட்டால் காபி குடிப்பது பழக்கம். நான் எங்கு சென்றாலும் என்னோடு காபி மெஷின் கூடவே இருக்கும்.

ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?

நேரம் கிடைத்தால் ஏதோ ஒன்றை எழுதிக் கொண்டே இருப்பேன். எனக்குள் ஒரு கதாசிரியை இருப்பது யாருக்கும் தெரியாது.

ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா?

இதை ஜோதிடம் என்பார்களா என்று தெரியாது.எனக்கு ஒரு வலுவான நம்பிக்கை இருக்கிறது. 8 எண் எனக்கு ராசி இல்லாத நம்பர். இது ஒரு துரதிருஷ்டமான நம்பர் என்று முடிவே செய்து விட்டேன். சின்னச் சின்ன கசப்பான அனுபவங்களினால் அந்த எண்ணம் இன்னும் வலுவாகிவிட்டது. நியூமராலஜிஸ்ட் ஆலோசனைப்படி எனது பெயரில் ஏ, ஹெச் இரண்டு எழுத்துக்களை கூடுதலாக சேர்த்துக் கொண்டேன்.அதன் பிறகு உண்மையாகவே எனக்கு அதிர்ஷ்டம் தேடி வந்தது.

நீங்கள் நடிக்க விரும்பாதது?

ராட்டினத்தில் சுற்றுவது என்றால் எனக்கு பயம். சினிமாவில் அந்த காட்சி இருந்தால் நிச்சயம் நடிக்க மாட்டேன்.

காதல், திருமணம் என்றெல்லாம் உங்களைப் பற்றி கிசு கிசுக்கள் வருகிறதே..

சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நான் கண்டுகொள்ள மாட்டேன்.எனது பெற்றோருக்கு அடுத்தபடியாக என்னை இந்த அளவுக்கு நேசிக்கும், அன்பு காட்டும் ரசிகர் களுக்கு சொல்லாமல் ஏன் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். அந்த நாள் வந்தால் நிச்சயம் அறிவிப்பேன்.

சினிமாவுக்கு வந்ததை எப்படி பார்க்கிறீர்கள்?

மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். சாதாரணமாக எல்லோரும் மாடலிங் செய்து அனுபவம் வந்த பிறகு சினிமாவில் நடிக்க முயற்சி செய்வார்கள். என் விஷயத்தில் மட்டும் இது உல்டாவாக நடைபெற்றது. முதலில் சினிமாவில் நடித்து அதன் பிறகு மாடலிங் செய்தேன். 13 வயதிலேயே `சாந்து ஷா ரோஷன் செஹரா' படத்தில் நடித்தேன். அதன் பிறகு நடிப்பதையே தொழிலாக தேர்ந்தெடுத்து மும்பையில் ஒரு ஆண்டு ஆக்டிங் கற்றுக் கொண்டேன். இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் நீடிப்பது சந்தோஷம் தானே.

உங்கள் நகை வியாபாரம் பற்றி...

சொந்தமாக ஜுவல்லரி பிராண்ட் ஆரம்பித்தேன். இப்போது வரை நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது. அதை இன்னும் விரிவாக்க வேண்டும்.


Next Story