உடலில், நீர் எடையைக் குறைக்கும் வழிகள்


உடலில், நீர் எடையைக் குறைக்கும் வழிகள்
x
தினத்தந்தி 28 March 2022 5:30 AM (Updated: 26 March 2022 12:14 PM)
t-max-icont-min-icon

உணவில் அதிக அளவு உப்பு சேர்த்துக் கொள்ளும்போது, உடனடியாகத் தண்ணீரை உடலில் தக்க வைக்கத் தூண்டும். இதனால், எடை அதிகரிக்கும்.

மது உடலில் இருக்கும் தேவையற்ற தண்ணீர், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறும். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி மற்றும் கர்ப்ப காலங்களில் உடலில் நீர் தேக்கம் ஏற்படுவது இயல்பானது. ஒரு சிலருக்கு உணவில் அதிக அளவு உப்பு சேர்த்தல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக அதிகப்படியான தண்ணீர், திசுக்களுக்கு இடையில் சேமிக்கப்படும். இதனால் உடல் எடை அதிகரிக்கும். சில எளிய வழிகளை கடைப்பிடிப்பதன் மூலம் இத்தகைய நீர் எடையைக் குறைக்க முடியும். அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

உணவில் உப்பைக் குறைத்தல்
உப்பு அதிகம் உள்ள உணவுகளை குறைப்பதுதான் உடல் எடை குறைப்பின் முதல் விதி. உணவில் அதிக அளவு உப்பு சேர்த்துக் கொள்ளும்போது, உடனடியாகத் தண்ணீரை உடலில் தக்க வைக்கத் தூண்டும். இதனால், எடை அதிகரிக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சீஸ், இறைச்சி போன்றவற்றில் உப்பு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, உப்பைத் தவிர்த்து காய்கறி, பருப்பு, சத்துள்ள தானியங்கள் ஆகியவற்றை சாப்பிடும்போது, உடல் எடை குறையும்.

போதுமான அளவு தண்ணீர்:
உடலில் இருந்து தேவையற்ற நீர் மற்றும் உப்பு வெளியேறும்போது, உடல் இயக்கமும், சிறுநீரக செயல்பாடும் சீராக நடைபெறுவதற்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பெரியவர்கள், தினமும் குறைந்தபட்சம் 2 லிட்டரும், சிறியவர்கள் 1.5 லிட்டரும் தண்ணீர் அருந்த வேண்டும்.

சீரான தூக்கம்:
உடல் எடைக் குறைப்பில் சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றுடன் சீரான தூக்கம் முக்கியமானது. அதன் மூலம் ஹார்மோன் சுரப்பிகள் சரியாக இயங்கும். தினமும் 7 முதல் 9 மணி நேரம் வரை உறங்குவது அவசியம்.

கார்போஹைட்ரேட் குறைப்பு:
கார்போஹைட்ரேட்டுகளைக் குறைப்பதால், கிளைகோஜன் அளவைக் குறைக்கலாம். இதன் மூலம் உடலில் இருக்கும் அதிகப்படியான தண்ணீர் வெளியேறி எடை எளிதாகக் குறையும்.  ரொட்டி, அரிசி, பாஸ்தா உள்ளிட்ட உணவுகளில் கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ளது. புரத உணவுகளை அதிகமாக எடுத்துக்கொண்டு கார்போஹைட்ரேட் உணவுகளைக் குறைக்கும் போது, உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.  

Next Story