தெருநாய்களை பராமரிப்பதில் ஆர்வம்...


தெருநாய்களை பராமரிப்பதில் ஆர்வம்...
x
தினத்தந்தி 28 March 2022 5:30 AM GMT (Updated: 26 March 2022 12:04 PM GMT)

தெரு நாய்களுக்கு உணவு வழங்குதல், காயம்பட்ட நாய்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தல் போன்ற பணிகளைச் செய்து வருகிறேன். தினமும் உணவு வழங்கும் நேரத்தில் பல நாய்கள் எங்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும்.

‘ஆதரவற்று வீதியில் சுற்றித்திரியும் நாய்களுக்கு, பாதுகாப்பான இடவசதி ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம்’ என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த வத்சலா. சொந்த விசைத்தறி மூலம் பருத்தித் துணிகள் உற்பத்தி செய்து, அவற்றை ஆயத்த ஆடைகளாக்கி ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறார். பல ஆண்டுகளாகத் தெரு நாய்களுக்கு நாள்தோறும் உணவளித்து, பராமரித்து வருகிறார். அவர் தனது அனுபவங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

“நான் தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்கிறேன். கணவர் திருமூர்த்தி என்னுடைய நற்பணி களுக்கு ஆதரவாக இருக்கிறார். எங்களுக்கு மகனும், மகளும் உள்ளனர்.

கணவரின் குடும்பத் தொழிலான நெசவுத் தொழிலை செய்து வந்தோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டரின் பேரில் அதிக துணியை நெய்து வைத்திருந்தோம். கடைசி நேரத்தில் அந்த ஆர்டர் ரத்து ஆனதால், செய்வதறியாது திகைத்து நின்றோம். அந்த சமயத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, ‘துணிகளை சட்டைகளாகத் தைத்து, அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விற்பனை செய்யலாம்’ என்று எனது மகள் யோசனை கூறினாள். எனக்கு அதில் ஆர்வம் இல்லையென்றாலும், மகளின் விருப்பத்துக்காக 100 சட்டைகளை மட்டும் தைத்து விற்பனை அறிவிப்பை வெளியிட்டேன். தரமான பருத்தி சட்டை என்பதால் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒரே வாரத்தில் லண்டனில் இருந்து 200 சட்டைகள் கேட்டார்கள்.

அதற்காக பத்து பேருக்கு முதலில் வேலை கொடுத்தேன். அதுமட்டுமின்றி வீட்டில் இருந்தபடியே சில பெண்கள் என்னிடம் துணியை வாங்கி விற்பதற்கு கேட்டார்கள். எனவே வாட்ஸ்ஆப் குழு ஆரம்பித்து அவர்களுக்கும் லாபம் வரும்படி விற்பனை செய் கிறேன். இப்போது என்னிடம் 30-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.

தெருநாய்களை பராமரிக்கும் எண்ணம் எப்படி வந்தது?
ஆரம்பத்தில் எனக்கு நாய்கள் மீது ஈடுபாடு கிடையாது. எனது மகளுடைய பிறந்த நாளுக்கு அவளது தோழி இரண்டு நாய்குட்டிகளை பரிசாகக் கொடுத்தார். அவற்றை வளர்க்க ஆரம்பித்த பிறகுதான் நாய்களின் மீது பிரியம் ஏற்பட்டது. 6 வருடங்களுக்கு முன்பு, திருப்பூரில் தெரு நாய்களை பராமரிக்கும் தங்கம் நினைவு அறக்கட்டளைக்கு சென்றிருந்தபோது, விபத்தில் அடிபட்ட நாய்கள் சிரமப்படுவதைப் பார்த்து வேதனைப்பட்டேன். அன்றிலிருந்து தெரு நாய்களுக்கு உணவு வழங்குதல், காயம்பட்ட நாய்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தல் போன்ற பணிகளைச் செய்து வருகிறேன். தினமும் உணவு வழங்கும் நேரத்தில் பல நாய்கள் எங்கள் வீட்டு வாசலில் காத்திருக்கும்.

லாக் டவுன் சமயத்தில் நானும், எனது பிள்ளைகளும் இரு சக்கர வாகனத்தில் எங்கள் பகுதி முழுவதும் சென்று தெரு நாய்களுக்கு உணவளித்தோம். நாய்களுக்கு உணவு வழங்குவதற்காக எங்களது வருமானத்தில் 20 சதவீதத்தை பயன்படுத்துகிறோம்.

உங்கள் எதிர்கால திட்டம் என்ன?
ஆதரவில்லாமல், ஒற்றை பெற்றோராக குழந்தைகளை வளர்ப்பவர்கள் பலருக்கு வேலை வழங்க வேண்டும். 

Next Story