கோடநாடு கொலை, கொள்ளை பற்றி விசாரணை நடத்த வேண்டும்
கோடநாடு கொலை, கொள்ளை பற்றி விசாரணை நடத்த வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
புதுச்சேரி
கோடநாடு கொலை, கொள்ளை பற்றி முழு அளவில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
புதுச்சேரியில் அஞ்சலகம் திறப்பு விழா நடந்தது. இதில் கலந்துகொண்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–
இலவச திட்டங்கள்புதுவை அரசாக இருந்தாலும், தமிழக அரசாக இருந்தாலும் மக்களுக்கு இலவசங்களை கொடுக்கும் திட்டங்களை நிறைவேற்றக்கூடாது. வருவாய் வரும் திட்டங்களையும், மாநில வளர்ச்சிக்கான திட்டங்களையுமே செயல்படுத்த வேண்டும். புதுவையில் கவர்னரும், முதல்–அமைச்சரும் அவரவர் எல்லையில் செயல்பட்டால் பிரச்சினை வராது. மக்களை சந்தித்து கருத்துகேட்கும் பொறுப்பு கவர்னருக்கும் உள்ளது.
கவனக்குறைவு, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால்தான் பெருமளவு விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துகளில் 15 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிகம் பலியாகின்றனர். இதனை கருத்தில் கொண்டுதான் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விசாரணைசென்னையில் இருந்து நாகப்பட்டினத்துக்கு கிழக்கு கடற்கரையில் 4 வழிச்சாலை அமைப்பதில் இதுவரை 44 சதவீத அளவுக்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. 90 சதவீதம் அளவுக்கு நிலங்களை கையகப்படுத்தினால்தான் திட்டத்தை தொடங்க முடியும்.
கோடநாடு, கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக முழு அளவில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை என்ற நிலை ஏற்படும்.
தமிழகத்தில் அமைச்சர்களின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் இறந்தது குறித்தும் முழு அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும். சட்டம்–ஒழுங்கு என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. குண்டர்கள் ஆட்சி என்ற நிலை எங்கும் வந்துவிடக்கூடாது.
தி.மு.க.வில் சேர தயாராக இல்லைதி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார். 1972–ல் எம்.ஜி.ஆர். கணக்குகளை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டார். அது வேறு கணக்கு. தற்போது பாரதீய ஜனதா ஒரு கணக்கு கேட்கிறது. அதாவது திராவிடன், தமிழன் என்று கூறி கருணாநிதி 5 முறை முதல்–அமைச்சர் பதவியில் இருந்துள்ளார்.
அந்த பதவி காலத்தில் எத்தனை அணைகள், படுகை அணைகள் கட்டப்பட்டன? கல்வித்துறை, விளையாட்டுத்துறை என அனைத்து அரசுத்துறைகளின் மூலம் என்னென்ன செய்யப்பட்டுள்ளது? என்ற கணக்கை ஒப்படைக்க வேண்டும். இளைஞர்கள் யாரும் இப்போது தி.மு.க.வில் சேர தயாராக இல்லை. திராவிடன், தமிழன் என்ற பாசாங்கு பலிக்காது.
அவலநிலைஅ.தி.மு.க. பிளவுபட்டு இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களை வளர்த்துக்கொள்ளவே பார்க்கின்றனர். பாரதீய ஜனதா விதிகளுக்கு உட்பட்டே கட்சியினை வளர்க்கிறது. தமிழக மாணவர்களை முட்டாளாக வைத்திருக்கவே நீட் தேர்வினை எதிர்க்கின்றனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
அரசுப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதில்லை. அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைகளுக்கே செல்கின்றனர். இந்த அவல நிலை மாற்றப்பட வேண்டும்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.