மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த போவதாக மிரட்டல் தஞ்சை பெரியகோவிலில் போலீஸ் குவிப்பு
மீத்தேன் திட்டத்தை எதிர்த்து நூதன போராட்டம் நடத்த போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் தஞ்சை பெரியகோவிலில் போலீசார் குவிக்கப்பட்டனர். கல்லூரி மாணவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்தியஅரசு செயல்படுத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி விவசாயிகளும், பல்வேறு கட்சி, அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மீத்தேன் திட்டத்தை முறியடித்திட தஞ்சை பெரியகோவிலில் சூடம் ஏற்றி போராட்டம் நடத்த போவதாக உழவர் விடுதலை கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏனாதி பூங்கதிர்வேல் மிரட்டல் விடுத்தார். இந்த போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழ்தேச குடியரசு கட்சி, தமிழக இளைஞர் முன்னேற்ற கழகம், தமிழ்தேச புரட்சி இயக்கம், புரட்சி பாரதம் கட்சி, தமிழர் நல பேரியக்கம் மற்றும் இயற்கை ஆர்வலர்கள், சமூக போராளிகள், மாணவர்கள், கிராமமக்கள் பங்கேற்க இருப்பதாகவும், இந்த போராட்டத்தில் பங்கேற்க வரும் அனைவரும் சூடம், தீப்பெட்டியுடன் வர வேண்டும் என்றும் சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தி சென்னை மெரினாவில் திரண்டதைபோல் தஞ்சை பெரியகோவிலில் கூடுவோம். விவசாயிகள் பிரச்சினையை வென்றெடுப்போம் வாருங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏனாதி பூங்கதிர்வேலை சிவகங்கையில் போலீசார் கைது செய்தனர். இருந்தாலும் மற்ற அமைப்பினர், விவசாயிகள், மாணவர்கள் திரண்டு வர வாய்ப்பு இருக்கிறது என கருதிய போலீசார் தஞ்சை பெரியகோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். நுழைவு வாயில் மட்டுமின்றி தஞ்சை பெரியகோவிலை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போலீஸ் வளையத்திற்குள் தஞ்சைகோவிலுக்கு வந்த அனைவரையும் நுழைவு வாயிலேயே போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அவர்கள் சுற்றுலா பயணிகள் என உறுதியான பின்னரே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ராஜராஜன் கோபுர வாயிலில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சுற்றுலா பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். சந்தேகப்படும்படியாக வந்த வாலிபர்களிடம் அடையாள அட்டை, செல்போன், பர்ஸ் ஆகியவற்றை வாங்கி பார்த்தனர். கோவிலுக்கு எதிரே வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் எந்த வாகனங்களையும் நிறுத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
அனைத்து வாகனங்களையும் கோர்ட்டு சாலையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்த வழிவகை செய்யப்பட்டது. கோவில் மட்டுமின்றி ராஜராஜசோழன் சிலை, சிவகங்கைபூங்கா, மேம்பாலத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சிவகங்கை பூங்கா வழியாக பெரியகோவிலுக்கு செல்ல பாதை உள்ளது. இந்த பாதையின் வழியாக மக்கள் செல்ல நேற்று தடை விதிக்கப்பட்டது. மேலும் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், பழைய கலெக்டர் அலுவலகம், புதிய கலெக்டர் அலுவலகம், மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, தபால் நிலையம், பெட்ரோல் விற்பனை நிலையம் உள்பட பல்வேறு இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கல்லூரி மாணவர்களிடம் விசாரணைகும்பலாக வந்தவர்களை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் வேன்கள், ஜீப்புகளிலும் போலீசார் தஞ்சையை சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கண்ணன், ரெத்தினவேல் ஆகியோர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 700–க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் தஞ்சை மாநகர் முழுவதும் போலீஸ் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.
இந்தநிலையில் பெரியகோவிலுக்கு சந்தேகப்படும்படி வாலிபர் ஒருவர் வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்தவர் என்பதும், விழுப்புரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதும், பூங்கதிர்வேலின் வாட்ஸ்அப் குரூப்பில் இருப்பது தெரியவந்தது. இதனால் போராட்டம் நடத்த வந்து இருப்பதாக சந்தேகத்தின்பேரில் விசாரணைக்காக அந்த மாணவரை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
திருச்சியில் இருந்து தஞ்சைக்கு வந்த பயணிகள் ரெயிலில் இருந்து கல்லூரி மாணவர்கள் 10 பேர் வந்து இறங்கினர். அவர்களை பார்த்தவுடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திருச்சியில் உள்ள வெவ்வேறு கல்லூரியில் படித்து வருவதாகவும், பெரியகோவிலை பார்ப்பதற்காக வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். வெவ்வேறு கல்லூரியில் படிப்பவர்கள் ஒன்றாக பெரியகோவிலுக்கு வந்து இருப்பதால் இவர்கள் போராட்டம் நடத்த வந்து இருக்கலாமோ என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவர்கள் எந்த அமைப்பிலாவது இருக்கிறார்களா? என துருவி, துருவி விசாரித்தனர். ஆனால் நாங்கள் அனைவரும் பெரியகோவிலை சுற்றி பார்க்க தான் வந்தோம் என தொடர்ந்து தெரிவித்தனர். இருந்தாலும் சந்தேகம் தீராததால் கல்லூரி மாணவர்கள் 10 பேரையும் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.