திருட்டு, கொள்ளை வழக்குகளில் 26 பேர் கைது


திருட்டு, கொள்ளை வழக்குகளில் 26 பேர் கைது
x
தினத்தந்தி 26 July 2017 10:00 PM GMT (Updated: 26 July 2017 10:00 PM GMT)

திருட்டு, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் இருந்து ரூ.95 லட்சம் மதிப்பிலான நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் துணை போலீஸ் கமி‌ஷனர் சரணப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு

பெங்களூரு தெற்கு மண்டல போலீசார், நகரில் திருட்டு, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் தொடர்புடைய கும்பல்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து தங்க நகைகள், வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களை மீட்டு இருந்தார்கள். அவற்றை, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று தெற்கு மண்டல துணை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெற்கு மண்டல துணை போலீஸ் கமி‌ஷனர் சரணப்பா, மீட்கப்பட்ட நகைகள், பொருட்களை பார்வையிட்டார். பின்னர் அவர், அந்த பொருட்களை அவற்றின் உரிமையாளர்களிடம் வழங்கினார். முன்னதாக துணை போலீஸ் கமி‌ஷனர் சரணப்பா நிருபர்களிடம் கூறியதாவது:–

பெங்களூரு தெற்கு மண்டலத்தில் உள்ள ஜெயநகர், பசவனகுடி, ஜே.பி.நகர், குமாரசாமி லே–அவுட் உள்ளிட்ட போலீசார், நகரில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 24 பேரை கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஒரு கிலோ எடையுள்ள தங்க நகைகள், 27 கிலோ வெள்ளி பொருட்கள், 2 கார்கள், 43 இருசக்கர வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதுதவிர செம்மரக் கட்டைகள் கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த திருப்பதி மற்றும் ராஜேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 400 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு ரூ.95 லட்சம் ஆகும். இதன்மூலம் பெங்களூரு நகரில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 87 குற்ற வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story