ஐகோர்ட்டு தடையை மீறி போராட்டம் விழுப்புரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் 992 பேர் கைது


ஐகோர்ட்டு தடையை மீறி போராட்டம் விழுப்புரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் 992 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2017 4:30 AM IST (Updated: 13 Sept 2017 1:21 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு தடையை மீறி விழுப்புரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 992 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், 7–வது ஊதியக்குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ‘ஜாக்டோ–ஜியோ’ அமைப்பினர் கடந்த 7–ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். விழுப்புரம் மாவட்டத்திலும் கடந்த 7–ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் போராட்டத்திற்கு மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது. இருப்பினும் தடையை மீறி மாவட்டம் முழுவதும் 64 அரசு ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களும், 17 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்களும் என ஆயிரக்கணக்கானோர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதனால் ஒரு சில அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. அதுபோல் சில கிராமப்புறங்களில் அடிப்படை வளர்ச்சி பணிகளும் பெரிதும் பாதிப்படைந்தது. அதுபோல் பள்ளிகளை பொறுத்தவரை பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு பதிலாக கற்கும் பாரத மைய ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்களை கொண்டு அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்க கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து விழுப்புரத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ரமேஷ், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் நடராசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ஜனார்த்தனன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் சின்னசாமி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வைத்தியநாதன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் ரஹீம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொருளாளர் செல்லையா உள்பட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

இவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் மண்டல செயலாளர் கமலக்கண்ணன், தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் விழுப்புரம், திண்டிவனம் அரசு கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் காலை 11.30 மணிக்கு கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் எதிரே விழுப்புரம்–திருச்சி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

உடனே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ்தங்கையா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கர், கோமதி ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட ‘ஜாக்டோ–ஜியோ’ அமைப்பை சேர்ந்த 302 பெண்கள் உள்பட 992 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.


Next Story