புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன்?
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பித்தது ஏன் என்று கேட்டு கலெக்டர், அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
புதுக்கோட்டையை சேர்ந்த கார்த்திகேயன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு மனுவில் கூறியிருந்ததாவது–
டி.டி.வி.தினகரனால் புதுக்கோட்டை மாவட்ட அ.தி.மு.க. அம்மா அணி செயலாளராக நியமிக்கப்பட்டேன். இதைத் தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 1–ந்தேதி போலீஸ் பாதுகாப்புடன் மாலை அணிவிக்க அனுமதிகோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தேன். அவர்கள் பதில் ஏதும் கூறாததால், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கு விசாரணை முடிவில், போலீஸ் பாதுகாப்புடன் அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவிக்க அனுமதி வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவை மீறும் வகையில் செப்டம்பர் 1–ந்தேதியன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீசார் திடீரென 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். இதனால் நாங்கள் திட்டமிட்டபடி தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்க முடியவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை மீறிய போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, “செப்டம்பர் 1–ந்தேதியன்று மட்டும் ஏன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது? இது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை ஆகாதா? இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பதில் அளிக்க வேண்டும்“ என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, போலீஸ் சூப்பிரண்டு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பின்னர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், 3 வருவாய்த்துறை கோட்டாட்சியர்கள், 4 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 2–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.