ஜெயலலிதா வீட்டில் வருமான வரி சோதனை: பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கண்டன கடிதம் எழுத வேண்டும்


ஜெயலலிதா வீட்டில் வருமான வரி சோதனை: பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கண்டன கடிதம் எழுத வேண்டும்
x
தினத்தந்தி 18 Nov 2017 8:45 PM GMT (Updated: 18 Nov 2017 1:33 PM GMT)

ஜெயலலிதா வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியது குறித்து பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து கடிதம் எழுத வேண்டும் என்று தனியரசு எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

நெல்லை,

ஜெயலலிதா வீட்டில் வருமான வரி சோதனை நடத்தியது குறித்து பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து கடிதம் எழுத வேண்டும் என்று தனியரசு எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

வ.உ.சி. சிலைக்கு மாலை

நெல்லைக்கு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு எம்.எல்.ஏ. நேற்று வந்தார். அவர், நெல்லை டவுனில் வ.உ.சி. மணிமண்டபத்தில் உள்ள வ.உ.சி. முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா மக்கள் செல்வாக்கு நிறைந்தவர். அவர் முதல்–அமைச்சராக இருந்த போது மத்திய மந்திரிகள் அவரை சந்திக்க நேரம் கேட்டு காத்திருந்தனர். அவர் உயிரோடு இருக்கும் வரை ஜெயலலிதா அனுமதி இல்லாமல் யாரும் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்குள் நுழைய முடியவில்லை.

கண்டிக்கத்தக்கது

அப்பபடி செல்வாக்கு மிகுந்த தலைவர் இறந்தவுடன் அவரது வீட்டுக்குள் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவருடைய செல்வாக்கையும், புகழையும் சீர்குலைக்கும் செயலாகவே நாங்கள் கருதுகிறோம். இந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது.

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இதுபோன்ற சோதனையை தடுத்து நிறுத்தி இருக்கலாம். இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும். ஜெயலலிதா வீட்டில் நள்ளிரவில் சோதனை நடத்தி இருப்பது தேவையற்றது. பழிவாங்கும் நோக்கத்தில் இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபடக்கூடாது.

மரியாதை நிமித்தமான சந்திப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழ் சமுதாயத்துக்கும் திராவிட இயக்கத்துக்கும் பாடுபட்ட தலைவர். அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது ஆஸ்பத்திரியில் சென்று பார்த்தோம். தற்போது மரியாதை நிமித்தமாகவே சந்தித்தோம். இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை. கருணாநிதியின் உடல் நலம் தேறி வருகிறார். நாங்கள் பேசியபோது எங்களது கையை பிடித்தார். நாங்கள் பேசியதை ஆர்வமாக கேட்டார். எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. விரைவில் கருணாநிதியின் உடல் நலம் பூரணமாக குணம் பெறும்.

இவ்வாறு தனியரசு எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story