திருக்கோவிலூர் அருகே கோவிலுக்கு சென்ற பெண் கழுத்தை நெரித்து கொலை

திருக்கோவிலூர் அருகே கணவருடன் குலதெய்வ கோவிலுக்கு சென்ற பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கணவர் மாயமாகி விட்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 35). இவரது மனைவி மலர்விழி (28) ஆவார். திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில், இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சென்னையில் தங்கியிருந்து காய்கறி வியாபாரம் செய்து வந்த இவர்கள், நேற்று காலை சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் கிராமத்தில் உள்ள இவர்களது குலதெய்வமான அய்யனார் கோவிலுக்கு சாமிகும்பிடுவதற்காக கணவன், மனைவி இருவரும் சென்றனர்.
சிறிது நேரத்தில், மலர்விழி மட்டும் கோவிலுக்கு அருகே ரத்த காயங்களுடன் உயிருக்காக போராடி கொண்டு, கிடந்ததை கிராமத்து மக்கள் பார்த்தனர். இதுபற்றி உடனடியாக அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், சப்–இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உயிருக்கு போராடிய மலர்விழியை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து இறந்துபோன மலர்விழியின் தந்தை குப்புசாமி அளித்த புகாரின் பேரில், அரகண்டநல்லூர் போலீசார் மலர்விழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மலர்விழியின் முகத்தில் தாக்கி, அவர் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பதற்கான அடையாளம் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதற்கிடையே மலர்விழியை கோவிலுக்கு அழைத்து சென்ற அவரது கணவர் மூர்த்தி சம்பவ இடத்தில் இல்லாமல், மாயமாகிவிட்டார். இதன் மூலம் அவர் கொலை செய்து விட்டு தப்பி சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் அரகண்டநல்லூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.