வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு விமானங்களில் கடத்திய 1½ கிலோ தங்கம் பறிமுதல்


வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு விமானங்களில் கடத்திய 1½ கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 July 2018 4:54 AM IST (Updated: 2 July 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு விமானங்களில் கடத்தி வந்த 1½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு,

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு பாங்காக்கில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களுடைய உடைமைகளையும் அதிகாரிகளும், போலீசாரும் சோதனை செய்தார்கள். அப்போது விஜய் என்ற பயணி வைத்திருந்த பையில் 400 கிராம் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு தங்கத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, விஜயை போலீசார் கைது செய்தார்கள். அவரிடம் இருந்து 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபோல, இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானங்களில் தங்கம் கடத்தி வந்ததாக பண்டுவால் விஜிவீரா மற்றும் முபாரக் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் பண்டுவால் விஜிவீராவிடம் இருந்து 180 கிராமும், முபாரக்கிடம் இருந்து 260 கிராமும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோன்று, துபாயில் இருந்து பெங்களூருவுக்கு வந்த விமானங்களில் தங்கம் கடத்தி வருவதாக வந்த தகவலை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த விமானங்களில் தங்கம் கடத்தி வந்த சேக் ஹசன், இஸ்மாயில், அப்துல் முனாப் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். அவர்களில் சேக் ஹசனிடம் இருந்து 233 கிராம், இஸ்மாயிலிடம் இருந்து 175 கிராம், அப்துல் முனாப்பிடம் இருந்து 290 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 4 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதுடன், அவர்களிடம் இருந்து ஒட்டு மொத்தமாக ஒரு கிலோ 538 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக கைதான விஜய், பண்டுவால் விஜிவீரா, முபாரக், சேக் ஹசன், இஸ்மாயில், அப்துல் முனாப் ஆகிய 6 பேர் மீதும் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story