போலீஸ் நிலையங்களுக்கு ஆன்–லைன் மூலம் புகார் அனுப்பும் வசதி 6 மாதத்தில் நிறைவேற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

போலீஸ் நிலையங்களுக்கு ஆன்–லைன் மூலம் புகார் அனுப்பும் வசதியை 6 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
போலீஸ் நிலையங்களில் அளிக்கப்படும் புகார் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–
போலீசில் கொடுக்கும் புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு சில வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. இதன் அடிப்படையில் போலீஸ் டி.ஜி.பி.யும் போலீஸ் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். ஆனாலும் புகார்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ஏராளமான மனுக்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகின்றன. எனவே தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஏற்கனவே 2016–ம் ஆண்டு அனுப்பிய சுற்றறிக்கை குறித்து மீண்டும் அறிவுறுத்த வேண்டும். புகார் செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் கட்டாயம் விசாரணையை முடிக்க வேண்டும். முக்கியமான சில புகார்களுக்கு 6 வார காலம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் மீண்டும் அறிவுறுத்தி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
விசாரணையின்நிலை குறித்து புகார்தாரர்களுக்கும், எதிர்தரப்பினருக்கும் தபால், இ–மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்க வேண்டும். போலீசார் தனது சுற்றறிக்கையை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க ஒரு குழுவை டி.ஜி.பி. அமைக்க வேண்டும். இந்தக்குழு 2 மாதத்திற்கு ஒருமுறை சுற்றறிக்கை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய தேவையான வசதியை அனைத்து போலீஸ் நிலையங்களிலும் 6 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும்.
விசாரணை அதிகாரிகளுக்கு தேவையான சிவில் மற்றும் குற்றம் தொடர்பான சட்ட அறிவு மற்றும் திறன் தொடர்பாக அவ்வப்போது பயிற்சி முகாம்கள் நடத்த வேண்டும். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வக்கீல்களை பயன்படுத்தலாம்.
சிவில் பிரச்சினை, கொலை வழக்கு, கொள்ளை மற்றும் குடும்ப பிரச்சினை, வணிக ரீதியான பிரச்சினைகளை கையாள்வது குறித்து ஒரு குழு அமைக்க உள்துறை செயலாளரும், டி.ஜி.பி.யும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை அடுத்த மாதம் 2–ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவில் கூறியுள்ளார்.