கலவர வழக்கில் ஜாமீன் பெற்றவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது ஏன்? தூத்துக்குடி கலெக்டர் இன்று ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கலவர வழக்கில் ஜாமீன் பெற்றவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது ஏன்? தூத்துக்குடி கலெக்டர் இன்று ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 31 July 2018 11:00 PM GMT (Updated: 31 July 2018 8:30 PM GMT)

தூத்துக்குடி கலவர வழக்கில் ஜாமீன் பெற்றவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது ஏன்? என்று தூத்துக்குடி கலெக்டர் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் “ஜனநாயக ஆட்சியா? போலீஸ் ஆட்சியா?“ என கேள்வியும் எழுப்பியது.

மதுரை,

மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஹரிராகவன். இவர் கடந்த மே மாதம் 22–ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது கலவரத்தை தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவர் மீது 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து கடந்த 6–ந்தேதி மதுரை மாவட்ட கோர்ட்டில் ஹரிராகவன் சரண் அடைந்தார். நீதிமன்ற காவலுக்கு பின்னர் அவர் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 24–ந்தேதி உத்தரவிட்டது. இந்தநிலையில் 26–ந்தேதி அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர் ஜாமீனில் வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது.

இதை எதிர்த்து ஹரிராகவனின் மனைவி சத்யபாமா, மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘எனது கணவருக்கு மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியதை கருத்தில் கொள்ளாமல், வேண்டுமென்றே அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல் முறையாக தெரிவிக்கப்படவில்லை. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை ஐகோர்ட்டு உத்தரவை அவமதிப்பதாகும். எனவே இதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவும், எனது கணவர் மீது பாய்ந்துள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அஜ்மல்கான் ஆஜராகி, “தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் தொடர்புடைய 90 பேருக்கு ஜாமீன் பெற்றுக்கொடுத்துள்ளோம். ஆனால் அவர்கள் மீது அடுத்தடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது சட்டவிரோத நடவடிக்கை. அதுபோலத்தான் மனுதாரரின் கணவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது“ என்று வாதாடினார்.

பின்னர் ஹரிராகவனுக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

“மனுதாரரின் கணவருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியபின்னர், அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது ஏன்?“ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், “இங்கு நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது போலீஸ் ஆட்சியா?“ என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தங்களது கண்டனத்தையும் தெரிவித்தனர்.

இதனையடுத்து “இந்த வழக்கு குறித்து விளக்கம் அளிக்க தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் நாளை (அதாவது இன்று) காலையில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story