காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு: சரண் அடைந்த தாதா மணிகண்டனின் தம்பியிடம் 2வது நாளாக விசாரணை


காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு: சரண் அடைந்த தாதா மணிகண்டனின் தம்பியிடம் 2வது நாளாக விசாரணை
x
தினத்தந்தி 4 Sept 2018 5:15 AM IST (Updated: 3 Sept 2018 11:54 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் பிரமுகர் கொலைவழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் சரண் அடைந்த தாதா மணிகண்டனின் தம்பியிடம் நேற்று 2 வது நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

வானூர்,

புதுச்சேரி மாநிலம் பெரிய காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் என்ற ரவி (வயது 42). புதுச்சேரி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவரான இவரை கடந்த ஜூலை மாதம் 30–ந்தேதி மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த கொலை குறித்து ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காங்கிரஸ் பிரமுகர்களான பெரிய காலாப்பட்டை சேர்ந்த சந்திரசேகர், செல்வகுமார், ஆனந்த், குமரேசன், பார்த்திபன் மற்றும் மோகன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சங்கர்கணேஷ் சென்னை பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். கடந்த மாதம் 11–ந்தேதி கடலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சாண்டில்யன் என்பவர் சரண் அடைந்தார். இந்த நிலையில் கடந்த 29–ந்தேதி விழுப்புரம் நீதி மன்றத்தில் புதுவை ரவுடி தாதா மணிகண்டனின் தம்பி மைக்கேல் ஏழுமலை என்பவர் சரண் அடைந்தார்.

அவரை போலீசார் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஆரோவில் போலீசார் மைக்கேல் ஏழுமலையிடம் விசாரணை நடத்துவதற்காக கோர்ட்டில் அனுமதி கேட்டனர். கோர்ட்டு 3 நாள் அவரிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கியது. இதனையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல் கிடைத்தது. நேற்று 2வது நாளாக அவரிடம் விசாரணை நடந்தது.

அதன் விவரம் வருமாறு:–

காங்கிரஸ் பிரமுகர் ஜோசப்பை கொலை செய்தவதற்கு கூலிப்படைகளை தயார்படுத்தினோம். ஜோசப்பை கண்காணித்தபடி வந்தோம். அப்போது ஜோசப்பை கொலை செய்ய உத்தரவு வந்தது. அதன்படி ஜோசப்பை கொலை செய்தோம்.

சங்கர் கணேசுக்காக இந்த கொலையை நாங்கள் செய்தோம். கொலை சம்பவத்தை அரங்கேற்றியதும் எனக்கு ரூ 2 லட்சம் தந்தனர். அதை வாங்கி கொண்டு நான் எனது மோட்டார் சைக்கிளை ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வாகன காப்பகத்தில் நிறுத்திவிட்டு சென்னை தப்பி சென்றேன். போலீசார் என்னை தேடுவதை அறிந்த பின்னர் விழுப்புரம் கோர்ட்டில் சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கில் தொடர்புடைய செய்யாது என்பவர் முக்கிய குற்றவாளி ஆவான். அவன் காலாப்பட்டு பஸ் எரிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளான். அவனிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். மேலும் 15 பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. விரைவில் அனைவரும் பிடிபடுவார்கள் என்று ஆரோவில் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் கூறினார்.


Next Story