இடத்தை காலி செய்யும்படி கொலை மிரட்டல் விடுத்ததாக அ.தி.மு.க. எம்.பி. மீது புகார்


இடத்தை காலி செய்யும்படி கொலை மிரட்டல் விடுத்ததாக அ.தி.மு.க. எம்.பி. மீது புகார்
x
தினத்தந்தி 7 Sep 2018 9:45 PM GMT (Updated: 7 Sep 2018 8:11 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏசியா டீ நிறுவன மேற்பார்வையாளர் மற்றும் பெண் தொழிலாளர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியாவிடம் நேற்று புகார் மனு கொடுத்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கேத்தியில் உள்ள ஏசியா டீ நிறுவன மேற்பார்வையாளர் தேவி மற்றும் பெண் தொழிலாளர்கள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

எங்களது நிறுவன உரிமையாளர் விஜயராஜூக்கும், அ.தி.மு.க.வை சேர்ந்த அர்ஜூணன் எம்.பி.க்கும் சில ஆண்டுகளாக டீ நிறுவன நிலம் தொடர்பாக முன்பகை உள்ளது. இந்த நிலையில் கடந்த 4–ந் தேதி அர்ஜூணன் எம்.பி. மற்றும் அவருடன் சிலர் வந்து எங்கள் நிறுவனத்தின் முன்பகுதியில் உள்ள கேட்டை உடைத்தனர். அந்த கேட்டின் அருகில் உள்ள வீட்டில்தான் நான் குடியிருந்து வருகிறேன்.

சத்தம் கேட்டு வீட்டைவிட்டு வெளியே வந்த நான், இதுபோன்ற அத்துமீறலில் ஏன் ஈடுபடுகிறீர்கள் என்று கேட்டபோது, 2 நாட்களுக்குள் இந்த இடத்தை காலி செய்யவில்லை என்றால் குடும்பத்துடன் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்கள். மேலும் நாங்கள் வெளியே செல்லும்போது எங்களை செல்போன் மூலம் புகைப்படம் எடுக்கிறார்கள். இது தொடர்பாக போலீசில் புகார் செய்தால் கண்டுகொள்வது இல்லை. எனவே இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.


Next Story