அவசர வழக்காக விசாரணை: தஞ்சை பெரியகோவிலில் நடக்க இருந்த தியான நிகழ்ச்சிக்கு தடை; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தஞ்சை பெரிய கோவிலில் 2 நாட்கள் நடக்க இருந்த தியான நிகழ்ச்சிக்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
மதுரை ஐகோர்ட்டில் நேற்று காலையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். அப்போது வக்கீல் முத்துக்கிருஷ்ணன் ஆஜராகி, தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் 7, 8–ந்தேதி (அதாவது நேற்றும், இன்றும்) வாழும் கலை அமைப்பு சார்பில் தியான நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமிக்க தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் தனியார் நிகழ்ச்சி நடத்துவது என்பது விதிமீறல் ஆகும். இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றது. இங்கு இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தினால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஏராளமானவர்களிடம் கட்டணம் வசூலித்து தியான நிகழ்ச்சி நடத்த உள்ளனர். எனவே தஞ்சை பெரியகோவிலில் தியான நிகழ்ச்சி நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வக்கீல் முத்துக்கிருஷ்ணன் முறையிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு அவசர வழக்காக பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மதியம் 1 மணி அளவில் அந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வக்கீல் முத்துக்கிருஷ்ணன் ஆஜராகி, “தஞ்சை பெரியகோவிலில் இதுவரை தனியார் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது கிடையாது. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கோவிலில் இந்த நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்பட்டால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படும்“ என்று வாதாடினார்
இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியது யார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு வக்கீல் பாஸ்கரபாண்டியன் ஆஜராகி, “இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கவில்லை. தொல்லியல்துறையில் அனுமதி பெறப்பட்டுள்ளது“ என்றார்.
வாழும் கலை அமைப்பு சார்பில் ஆஜரான வக்கீல் கிருஷ்ணவேணி, “தியான நிகழ்ச்சியால் எந்த பாதிப்பும், பக்தர்களுக்கு அசவுகரியமும் ஏற்படாதவாறு தான் நடத்த உள்ளோம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளவர்களிடம் கட்டணம் எதுவும் பெறவில்லை“ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “இந்த கோவிலுக்கு பதிலாக மாற்று இடத்தில் நடத்தலாமே?” என்று கேள்வி எழுப்பினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுவிட்டது என்று வக்கீல் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.
விசாரணை முடிவில், “இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக தொல்லியல் துறையினர் சேர்க்கப்படுகிறார்கள். தஞ்சை பெரியகோவிலில் நடத்த ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த கோவிலில் தியான நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டு இருந்த பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் அகற்றப்பட்டுவிட்டன என்பதை தஞ்சை கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உறுதிப்படுத்த வேண்டும். இந்த வழக்கு குறித்து கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, தொல்லியல் துறை உதவி இயக்குனர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு (10–ந்தேதி) ஒத்திவைத்தனர்.