ரெயில்வேக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ரெயில்வேக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 9:43 PM GMT)

ரெயில்வேக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரையைச் சேர்ந்த பிரபாகர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. ஆனால் ரெயில் நிலைய வளாகத்தில் சில அரசியல் தலைவர்கள், தனியார் அமைப்புகளின் தலைவர்களை வரவேற்கும் வகையில் பிளக்ஸ் போர்டு, பேனர்கள் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் வைக்கப்பட்டுள்ளன. இதனால் ரெயில் பயணிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

ரெயில்வேதுறைக்கு சொந்தமான சுவர்களில் அரசியல் விளம்பரங்கள் வரைந்துள்ளனர். எனவே அனைத்து ரெயில் நிலையங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டு, பேனர்களை அகற்றவும், சுவர் விளம்பரங்களை அழிக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் மிஸ்ரா நேரில் ஆஜராகி, ‘‘ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தென்னக ரெயில்வேயில் 90 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 4,500 பேர் தினமும் பணிக்கு வருவதில்லை. இதுகுறித்து அவர்கள் எந்த தகவலும் தெரிவிப்பதில்லை. சென்னை உள்பட 19 ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு 24 மணி நேரமும் மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ரெயில்களில் பயணிக்கும்போது கொடுக்கப்படும் உணவு, குடிநீர் போன்றவை தரமானவையா என்பதில் எங்களுக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே உணவு மற்றும் குடிநீர் தரமானதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

பின்னர் மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.காந்தி ஆஜராகி, ‘‘பல்வேறு ரெயில் நிலையங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் இதுவரை அகற்றப்படவில்லை. அதேபோல ரெயில்வேக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று வாதாடினார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

இந்த வழக்கில் எஸ்.ஆர்.எம்.யூ. உள்ளிட்ட ரெயில்வே தொழிற்சங்கங்களையும், ரெயில்வே டி.ஜி.பி., ஐ.ஜி ஆகியோரையும் இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது.

அனைத்து ரெயில் நிலையங்களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ஊழியர்களின் வருகையை உறுதி செய்ய அனைத்து ரெயில் நிலையங்களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பயோ மெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த வேண்டும்.

மேலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பாக 182 என்ற எண்ணில் புகார் அளிப்பது குறித்து ரெயில் பெட்டிகளில் விளம்பரம் செய்ய வேண்டும். ரெயில் நிலையங்களில் அனுமதியின்றி வைத்துள்ள பிளக்ஸ் பேனர்களை போலீஸ் பாதுகாப்புடன் உடனடியாக அகற்ற வேண்டும். ரெயில் நிலைய சுவர்களில் உள்ள விளம்பரங்களை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும்.

ரெயில்வே அளிக்கும் உணவு, குடிநீரின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் ரெயில்வே பயணிகளுக்கு உரிய மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்திருப்பது போல், அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

ரெயில்வே நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கங்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகள், கட்டிடங்களின் விவரங்கள், வாடகை தராமல், உரிமம் பெறாமல் ரெயில்வே இடங்களில் இருப்பவர்களின் விவரங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாடகை வசூலிக்கவும் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story