6 மாத ஜெயில் தண்டனைக்கு எதிரான நீதிபதி கர்ணன் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு

6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.
புதுடெல்லி
இந்த வழக்கில், நீதிபதி கர்ணன் குற்றவாளி என்று கடந்த மே 9–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அவருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதித்தது.
அதன்பிறகு தலைமறைவான நீதிபதி கர்ணன், கோவை அருகே கைது செய்யப்பட்டார். கொல்கத்தா ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, 6 மாத ஜெயில் தண்டனையை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வக்கீல் மாத்யூஸ் நெடும்பரா மூலமாக நீதிபதி கர்ணன் ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில் அவர், ‘கடந்த மே 9–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு எனக்கு தண்டனை பிறப்பித்ததில், இயற்கை நீதி தத்துவங்கள் பின்பற்றப்படவில்லை. ஆகவே, அந்த உத்தரவை அரசியல் சட்டத்துக்கு முரணானது, செல்லாது என்று அறிவிக்க வேண்டும். கோர்ட்டு அவமதிப்பு சட்டம், அரசியல் சட்டப்படி செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.
இந்த மனு, தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி.ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.நேற்றைய விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சஞ்சய் ஜெயின், ‘தனது தரப்பு வாதத்தை முன்வைக்க நீதிபதி கர்ணனுக்கு சுப்ரீம் கோர்ட்டு போதிய வாய்ப்பு அளித்தது. எனவே, அவமதிப்பு சட்டத்தை அவர் எதிர்ப்பது தேவையற்றது. இது உள்நோக்கம் கொண்டது. இம்மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது’ என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.