நவோதயா பள்ளிகள் தொடங்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை


நவோதயா பள்ளிகள் தொடங்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை
x
தினத்தந்தி 11 Dec 2017 10:30 PM GMT (Updated: 11 Dec 2017 8:37 PM GMT)

தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

புதுடெல்லி,

தமிழகத்தில் ஜவகர் நவோதயா பள்ளிகள் தொடங்க வேண்டும் என்று கன்னியாகுமரி மகாசபா அமைப்பின் செயலாளர் ஜெயக்குமார் தாமஸ் ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு நடத்திவரும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 6 முதல் 8–ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டணமின்றியும் 9 முதல் 12 வரை படிக்கும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் நவோதயா பள்ளி ஒன்றுகூட இல்லை. எனவே தமிழ்நாட்டிலும் மாவட்டந்தோறும் இந்த பள்ளிகளை தொடங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, பள்ளிகளை தொடங்க அனுமதி வழங்குவது தொடர்பாக முடிவுவெடுக்க தமிழக அரசுக்கு 8 வாரம் கால அவகாசம் அளித்தது. நவோதயா பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கவும் அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் அரியமா சுந்தரம், அரசு வக்கீல் கே.வி.விஜயகுமார் ஆகியோர் ஆஜரானார்கள்.

விசாரணை தொடங்கியதும் தமிழக அரசு தரப்பில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நவோதயா பள்ளிகள் மூலம் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய அரசு முயன்றது. எனவே, இந்த பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை. எனவே இந்த பள்ளிகளை தொடங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது பற்றி மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து தமிழக அரசின் மனுவின் மீது பதிலளிக்க கன்னியாகுமரி மகாசபா அமைப்புக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.


Next Story