காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 5 பேர் பலி

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு,
இந்திய வீரர்களின் பதிலடியால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
காஷ்மீரில் இந்தியா–பாகிஸ்தான் இடையேயான சர்வதேச எல்லைப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இதை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி கடும் சேதத்தை விளைவித்து வருகிறது.பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறல்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வருகிறது. கடந்த 12–ந் தேதி முதல் அங்குள்ள கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களில் நடந்து வரும் தாக்குதலுக்கு எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியாகி உள்ளார். மேலும் பலர் காயமடைந்தனர்.
இதன் தொடர்ச்சியாக ஜம்மு மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடுத்தது. அங்குள்ள ஆர்.எஸ்.புரா, ஆர்னியா மற்றும் பிஸ்னா ஆகிய எல்லையோர பகுதிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கு கடுமையான துப்பாக்கிச்சூட்டில் இறங்கிய பாகிஸ்தான் வீரர்கள், சிறிய ரக பீரங்கிகளாலும் திடீர் தாக்குதலை நடத்தினர்.இதில் எல்லை பாதுகாப்பு படையினரின் நிலைகள் மட்டுமின்றி, அங்குள்ள கிராமங்களும் பெருத்த சேதமடைந்தன. அதிகாலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஆர்னியா பகுதியில் பணியில் இருந்த சீதாராம் உபத்யாயா (வயது 28) என்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் படுகாயமடைந்தார்.
பின்னர் அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச்சென்றபோது, வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. ஜார்கண்ட் மாநிலத்தின் கிரிடி பகுதியை சேர்ந்த அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இதைப்போல ஆர்.எஸ்.புரா பகுதியை சேர்ந்த ஒரு கணவன்–மனைவி, ஆனியா பகுதியை சேர்ந்த மேலும் இருவர் என அப்பாவி மக்கள் 4 பேரும் உயிரிழந்தனர். மேலும் எல்லை பாதுகாப்பு படை துணை சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றும் பணிகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலுக்குள்ளான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இது நேற்று நண்பகலை தாண்டியும் சில இடங்களில் தொடர்ந்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வீரர்களின் பதில் தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்டது.பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்திய அதே வீரியமுடைய ஆயுதங்கள் மூலம் இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்ததாகவும், இதனால் எல்லையில் பதற்றம் நிலவுவதாகவும் எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. ராம் அவ்தார் கூறினார். அறுவடை காலம் முடிந்து விட்டதால், பாகிஸ்தான் ராணுவத்தின் இத்தகைய குறும்புகளை தாங்கள் எதிர்பார்த்து, அதற்காக தயாராகி இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சில வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கவும், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார். இந்த சூழலில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.