பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 4-ந் தேதி விசாரணை


பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் 4-ந் தேதி விசாரணை
x
தினத்தந்தி 2 July 2019 3:30 AM IST (Updated: 2 July 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் 4-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி,

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக்குகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டு நடத்திய தேர்வில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 569 பேர் பங்கேற்றனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றவர். பின்னர் அவர்கள் கல்வி சான்றிதழ்களை சரிபார்க்கும் பணிக்காக அழைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி 8-ந் தேதி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டிலும், ஐகோர்ட்டு மதுரை கிளையிலும் தனித்தனியாக பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டில் விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவு சரிதான் என்று உத்தரவிட்டார்.

ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், 196 விடைத்தாள்களில் மட்டுமே மோசடி நடந்துள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டு இருப்பதால் தேர்வை ரத்து செய்தது செல்லாது என்றும், 196 பேரை தவிர, தேர்ச்சி பெற்ற பிறருடைய கல்வி சான்றிதழை சரிபார்க்கும் பணியை மேற்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.

இரு விதமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதால் அரசு தரப்பிலும், தேர்வில் பங்கேற்றவர்கள் தரப்பிலும் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசலு ஆகியோர் விசாரித்தனர்.

அவர்கள் கடந்த மார்ச் 7-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், “பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்த அரசின் உத்தரவு செல்லாது. முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரின் விண்ணப்பங்களை மட்டும் நிராகரித்துவிட்டு, தேர்ச்சி பெற்ற பிற தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தும் பணி மேற்கொள்ள வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவை வழங்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று மீண்டும் கூடிய நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் தமிழக அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி சீனிவாசன் ஆஜராகி, விவகாரத்தின் அவசரத்தன்மை கருதி இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.


Next Story