காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் - தி.மு.க. வெளிநடப்பு


காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் - தி.மு.க. வெளிநடப்பு
x
தினத்தந்தி 9 Dec 2019 10:30 PM GMT (Updated: 9 Dec 2019 10:04 PM GMT)

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே குடியுரிமை திருத்த மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இலங்கை தமிழர்களை சேர்க்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

புதுடெல்லி,

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களை தாங்க முடியாமல், இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உருவாக்கி உள்ளது.

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த எதிர்ப்பை மீறி, நேற்று நாடாளுமன்ற மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இதை தாக்கல் செய்தார்.

மசோதாவை தாக்கல் செய்வதற்கு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சசிதரூர், கவுரவ் கோகாய் (காங்கிரஸ்), சவுகதா ராய் (திரிணாமுல் காங்கிரஸ்), அசாதுதின் ஒவைசி (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மசோதா, சிறுபான்மையினருக்கு எதிரானது, பிற்போக்குத்தனமானது என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டினார். அமித்ஷா குறித்து ஒவைசி தெரிவித்த கடுமையான கருத்துக்கு சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார்.

தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு, “இந்த மசோதாவில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கும் அம்சம் சேர்க்கப்படவில்லை. தமிழர் உணர்வுகளை மத்திய அரசு மதித்திருக்க வேண்டும்” என்று கூறினார். தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறனும் அதே கருத்தை வலியுறுத்தி பேசினார்.

அதற்கு அமித்ஷா, உறுப்பினர்கள் எழுப்பிய எல்லா கேள்விகளுக்கும் விவாதத்தின்போது பதில் அளிப்பேன் என்று உறுதி அளித்தார்.

இருப்பினும், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் திரும்பி வந்தனர்.

காங்கிரஸ் உறுப்பினர் மணீஷ் திவாரி பேசுகையில், “அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், இந்த மசோதா மதத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். எனவே, அகதிகள் தொடர்பாக விரிவான மசோதா கொண்டு வாருங்கள். அப்படி இல்லாமல் இதை நிறைவேற்றுவது பெரிய தவறாக இருக்கும்” என்றார்.

பின்னர், மசோதா மீதான விவாதத்தை தொடங்கி வைத்து அமித்ஷா பேசியதாவது:-

குடியுரிமை தொடர்பாக 2014-ம் ஆண்டு மற்றும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. மக்களும் ஆதரித்து பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்தினர். எனவே, இந்த மசோதாவுக்கு 130 கோடி மக்களின் ஆதரவு உள்ளது.

இந்த மசோதா, சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற எதிர்க்கட்சிகளின் கருத்தை நிராகரிக்கிறேன். .001 சதவீதம் கூட அவர்களுக்கு எதிரானது அல்ல.

ஊடுருவல்காரர்களையும், அகதிகளையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். இந்த மசோதா, யாரையும் பாரபட்சமாக பார்க்கவில்லை. யாருடைய உரிமைகளையும் பறிக்கவில்லை. வடகிழக்கு மாநில மக்கள் பயப்பட வேண்டாம். அவர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள் பாதுகாக்கப்படும்.

இந்த மசோதாவுக்கு என்ன அவசியம் வந்தது? இந்த நாட்டை மத அடிப்படையில் காங்கிரஸ் பிரித்தது. அதனால்தான், குடியுரிமை மசோதாவுக்கு அவசியம் ஏற்பட்டது. மத அடிப்படையில் பிரிக்காமல் இருந்திருந்தால், இதை கொண்டு வர வேண்டிய தேவையே இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

அமித்ஷா பேசியபோது, அவருக்கும், காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. 1935-ம் ஆண்டு, வீர சாவர்க்கர் தலைமையிலான இந்து மகாசபைதான், மத அடிப்படையிலான இரு நாடுகள் கொள்கையை முதன் முதலில் முன்வைத்ததாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதிலடி கொடுத்தார்.

Next Story