டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தின் போது நடைபெற்ற போலீஸ் தடியடி பற்றி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு - இன்று விசாரணை நடைபெறுகிறது


டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தின் போது நடைபெற்ற போலீஸ் தடியடி பற்றி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு - இன்று விசாரணை நடைபெறுகிறது
x
தினத்தந்தி 16 Dec 2019 11:15 PM GMT (Updated: 16 Dec 2019 9:58 PM GMT)

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தின் போது நடைபெற்ற போலீஸ் தடியடி பற்றி விசாரிக்க கோரி, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முறையிடப்பட்டது. எனவே இந்த விவகாரம் பற்றி இன்று விசாரணை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது. இந்த போராட்டம் நேற்று முன்தினம் டெல்லிக்கும் பரவியது. டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் மதுரா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென வன்முறை ஏற்பட்டது. 4 பஸ்களும், 2 போலீஸ் வாகனங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டி அடித்தனர். இதில் 35 பேர் காயம் அடைந்தனர். கல்வீச்சில் 6 போலீசார் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியே போராட்டக்களமாக மாறியது. பல மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் தடியடிக்கு கண்டனம் தெரிவித்தும், கைதான மாணவர்களை விடுவிக்க கோரியும் டெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்தின் முன்பு இரவில் மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். விடிய விடிய போராட்டம் நீடித்தது.

இந்த நிலையில், இந்த பிரச்சினை நேற்று சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

மூத்த வக்கீல்கள் இந்திரா ஜெய்சிங், கூலின் கான்சல்வ்ஸ் ஆகியோர் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஆர்.எஸ்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி போலீஸ் தடியடி நடத்தியது குறித்தும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் பற்றியும் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டனர்.

அதற்கு நீதிபதிகள், போராட்டமும், வன்முறையும் நீடிக்கும் நிலையிலும், பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவது தொடரும் நிலையிலும் இந்த விவகாரம் பற்றி தாங்கள் விசாரிக்க முடியாது என்றனர்.

அத்துடன், தாங்கள் எல்லாவற்றையும் விசாரிக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் பஸ்களை எரிக்கும் போதும், பொது சொத்துகளை சேதப்படுத்தும் போதும் எப்படி விசாரிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், முதலில் அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

அப்போது மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங், அமைதியான முறையில் நடைபெறும் போராட்டத்தை யாரும் தடுக்க முடியாது என்றும், மாணவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டி விட்டு இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

கூலின் கான்சல்வ்ஸ் வாதாடுகையில், தான் ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்த மாணவர்களையும் மற்றும் போலீஸ் காவலில் வைக்கப்பட்ட மாணவர்களையும் பார்த்ததாகவும் கூறினார்.

அதற்கு, என்ன நடக்கிறது என தங்களுக்கு தெரியவில்லை என்று கூறிய நீதிபதிகள் முதலில் அமைதி ஏற்படட்டும் என்றனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்யுங்கள் செவ்வாய்க்கிழமை (இன்று) விசாரிக்கிறோம் என்றும் கூறினார்கள். எனவே இந்த பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Next Story