நவநிர்மாண் சேனா தலைவரை சுட்டுக்கொன்றவர் கைது; தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகம் சூறை; பலத்த போலீஸ் பாதுகாப்பு


நவநிர்மாண் சேனா தலைவரை சுட்டுக்கொன்றவர் கைது; தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகம் சூறை; பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 3 April 2021 8:16 PM GMT (Updated: 3 April 2021 8:16 PM GMT)

நவநிர்மாண் சேனா தலைவரை சுட்டுக்கொன்றவர் உத்தரப்பிரதேசத்தில் சிக்கினார்.

இதையடுத்து ராபோடியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை அவரது உறவினர்கள் அடித்து சேதப்படுத்தியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சுட்டுக்கொலை

தானே மாவட்டத்தின் நவநிர்மாண் சேனா தலைவர்களில் ஒருவரும், தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலருமான ஜமீல் அகமது சேக் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் தானே உள்பட மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே குற்றவாளிகளை விரைவில் பிடித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாரிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை பிடிக்க நடத்திய விசாரணையில் கோரக்பூரை சேர்ந்த இர்பான் சோனு ஷேக் என்பவர் தான் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது தெரியவந்தது

உத்தரப்பிரதேசத்தில் கைது

மேலும் அவர் உத்தரப்பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மும்பை போலீசார் உத்தரப்பிரதேச மாநில போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அந்த மாநில சிறப்பு படை போலீசார் விசாரணை நடத்தி கவுதாலா ஏரி அருகே பதுங்கி இருந்த இர்பான் சோனு ஷேக்கை கைது செய்தனர்.

கட்சி அலுவலகம் சேதம்

மேலும் போலீசாரிடம் அவர் தெரிவிக்கையில் ராபோடி தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகரான நஜிமுல்லா என்பவரின் உத்தரவின் பேரில் தான் கொலை செய்ததாக தெரிவித்து உள்ளது. இதற்காக ஒசாமா என்பவர் ரூ.2 லட்சம் கொடுத்ததாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து மராட்டிய போலீசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில் இது பற்றி தகவல் அறிந்த கொலையான ஜமீல் அகமது சேக்கின் உறவினர்கள் திரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினர். இது பற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்த சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story