ரபேல் ஒப்பந்தத்துக்கு ரூ.9 கோடி லஞ்சம் கொடுத்த தகவல் குறித்து விசாரணை; காங்கிரஸ் கட்சி போர்க்கொடி


ரபேல் ஒப்பந்தத்துக்கு ரூ.9 கோடி லஞ்சம் கொடுத்த தகவல் குறித்து விசாரணை; காங்கிரஸ் கட்சி போர்க்கொடி
x
தினத்தந்தி 6 April 2021 12:31 AM IST (Updated: 6 April 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

ரபேல் ஒப்பந்தத்துக்கு ரூ.9 கோடி லஞ்சம் கொடுத்ததாக வெளியாகி இருக்கும் தகவல் குறித்து முழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கி உள்ளது.

இந்தியாவுக்கு ரபேல் விமானங்கள்

பிரான்ஸ் நாட்டில் இருந்து சுமார் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தப்படி பிரான்சின் டசால்ட் நிறுவனம் 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து விமானங்களையும் இந்தியாவுக்கு வழங்க வேண்டும். அந்தவகையில் இதுவரை 14 விமானங்கள் இந்தியா வந்துள்ளன.

பல பத்தாண்டுகளுக்கு பிறகு இந்தியா மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய இந்த பாதுகாப்புத்துறை கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின.

சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

குறிப்பாக முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.அத்துடன் இந்த விமானங்கள் தயாரிப்பில் பங்குதாரராக அனில் அம்பானியின் நிறுவனத்தை இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள் இந்த விவகாரத்தில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டினர்.பின்னர் இது தொடர்பாக 2018-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ரபேல் ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேடும் நிகழவில்லை எனக்கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தது. இதன் மூலம் இந்த சர்ச்சைகள் சற்று ஓய்ந்திருந்தன.

ரூ.9 கோடி லஞ்சம்

ஆனால் தற்போது இந்த ஒப்பந்தம் தொடர்பாக புதிய குற்றச்சாட்டு ஒன்று கிளம்பி இருக்கிறது. அதாவது இந்த ஒப்பந்தத்துக்காக இடைத்தரகர் ஒருவருக்கு 1.1 மில்லியன் யூரோ (சுமார் ரூ.9 கோடி) கமிஷன் கொடுக்கப்பட்டதாக பிரெஞ்சு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டு இருக்கிறது.

இந்த ஒப்பந்தம் குறித்து பிரெஞ்சு ஊழல் தடுப்பு நிறுவனம் நடத்திய விசாரணையில் இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், டெப்சிஸ் சொல்யூசன்ஸ் (இடைத்தரகர்) என்ற இந்திய நிறுவனத்துக்கு அந்த பணம் கைமாறப்பட்டு இருப்பதாகவும் அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த தொகையை ‘வாடிக்கையாளருக்கு பரிசுகள்’ என்று டசால்ட் நிறுவனம் செலவாக காட்டியிருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.பிரெஞ்சு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த தகவல் இந்தியாவில் மீண்டும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

ராகுல் குற்றச்சாட்டு உறுதி

இது தொடர்பாக கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் கூறி வந்தார். பிரெஞ்சு செய்தி நிறுவனத்தின் தகவல்கள் மூலம் தற்போது அது உண்மை என நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.இந்தியாவின் மிகப்பெரிய இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் உண்மையில் எவ்வளவு லஞ்சம் மற்றும் கமிஷன் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய முழுமையான மற்றும் சுதந்திரமான விசாரணை இப்போது தேவையில்லையா?

பிரதமர் மோடி பதிலளிப்பாரா?

அப்படி கொடுத்திருந்தால், இந்திய அரசில் யாருக்கு அது கொடுக்கப்பட்டது? என்பதை கண்டறிய வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இப்போது நாட்டுக்கு பதில் கூறுவாரா?

பாதுகாப்பு கொள்முதல் நடைமுறைப்படி (டி.பி.பி.) ஒவ்வொரு பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தத்திலும் இடைத்தரகர் முறை, கமிஷன் அல்லது லஞ்சம் போன்றவை தலையிடாதபடி ஒரு ஒருங்கிணைந்த வகுப்பு இடம்பெற்றிருக்கும். அப்படி இத்தகைய முறைகேடுகளுக்கான ஆதாரம் கிடைத்தால் இந்த கொள்முதலுக்கு தடை, ஒப்பந்தம் ரத்து, வழக்கு பதிவு உள்ளிட்ட தண்டனைகளை அந்த நிறுவனம் சந்திக்க வேண்டியிருக்கும்.அப்படி டசால்ட் நிறுவனம் மீது கடும் நிதி அபராதம் விதித்தல், நிறுவனத்தை தடை செய்தல், வழக்கு பதிவு செய்தல் மற்றும் பிற அபராதம் விளைவிக்கும் நடவடிக்கைகளை ரபேல் ஒப்பந்த முறைகேடு தூண்டவில்லையா? இருநாட்டு அரசுகளுக்கு இடையேயான நேரடி பாதுகாப்பு ஒப்பந்தம் அல்லது இந்திய பாதுகாப்பு கொள்முதல் திட்டத்தில் டி.பி.பி.க்கு எதிராக எப்படி இடைத்தரகர், கமிஷன் போன்றவற்றை அனுமதிக்க முடியும்?

இவ்வாறு ரந்தீப் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பினார்.


Next Story