பிரதமர் இல்லம் முன் முற்றுகை போராட்டம் நடத்த ஆம் ஆத்மி முடிவு; போலீசார் குவிப்பு


பிரதமர் இல்லம் முன் முற்றுகை போராட்டம் நடத்த ஆம் ஆத்மி முடிவு; போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 26 March 2024 9:53 AM IST (Updated: 26 March 2024 11:15 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடியின் இல்லம் முன் இன்று முற்றுகை போராட்டம் நடத்துவது என ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவாலை அமலாக்க துறை அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். இதற்கு இந்தியா கூட்டணியை சேர்ந்த ராகுல் காந்தி, சசி தரூர், மெகபூபா முப்தி உள்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். எனினும், சிறையில் இருந்தபடி கெஜ்ரிவால் அரசை வழிநடத்துவார் என டெல்லி மந்திரி அதிஷி கூறினார்.

இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் கூறினார். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் நடந்த, இந்த கைது நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லம் நோக்கி இன்று காலை பேரணியாக செல்வது என ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.

இதனை தொடர்ந்து, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பிரதமர் இல்லம் நோக்கி செல்ல கூடிய வழியில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி டெல்லியின் துணை காவல் ஆணையாளர் தேவேஷ் குமார் மஹ்லா இன்று காலை கூறும்போது, ஆம் ஆத்மி போராட்டம் நடத்த எந்தவித அனுமதியும் அளிக்கப்படவில்லை. அவர்கள் முறையான அனுமதியும் பெறவில்லை.

பிரதமர் இல்லம் மற்றும் பட்டேல் சவுக் மெட்ரோ ரெயில் நிலையத்தில் போலீசார் போதிய அளவில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. நகரில் பேரணியோ அல்லது ஊர்வலம் செல்லவோ அனுமதி இல்லை. வாகனங்களை வேறு வழியில் திருப்பி விடும் பணிகளும் நடைபெறாது என்று கூறியுள்ளார்.


Next Story