நடிகர் சுதீப்பின் படங்களை திரையிட தடை கேட்க மாட்டோம்; காங்கிரஸ் சொல்கிறது


நடிகர் சுதீப்பின் படங்களை திரையிட தடை கேட்க மாட்டோம்; காங்கிரஸ் சொல்கிறது
x

பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நடிகர் சுதீப்பின் படங்களை திரையிட தடை கேட்க மாட்டோம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

பெங்களூரு:

பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நடிகர் சுதீப்பின் படங்களை திரையிட தடை கேட்க மாட்டோம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நோட்டீஸ் அனுப்பவில்லை

கர்நாடக எல்லை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மராட்டிய அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துகிறது. இதை எதிர்க்காமல் பா.ஜனதா வேடிக்கை பார்க்கிறது. பா.ஜனதா கர்நாடகத்தை உடைக்கிறது. அந்த கட்சி தலைவர்களுக்கு கர்நாடகத்தின் அடையாளத்தை பற்றி கவலை இல்லை. ஒருங்கிணைந்த கர்நாடகத்தை உருவாக்க நடைபெற்ற போராட்டத்தில் பா.ஜனதாவினருக்கு எந்த பங்கும் இல்லை. அதனால் பா.ஜனதாவினருக்கு கன்னடர்கள் மீது அன்பு இல்லை.

ராய்ச்சூர் பா.ஜனதா எம்.எல்.ஏ., சிவராஜ் பட்டீல் பேசும்போது, ராய்ச்சூர் மேம்பாட்டிற்கு கர்நாடக அரசு போதிய அளவில் நிதி ஒதுக்கவில்லை, அதனால் ராய்ச்சூரை தெலுங்கானாவுடன் சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். மந்திரி பிரபுசவான் முன்னிலையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். ஆனால் அவருக்கு இந்த அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவில்லை.

எல்லை பிரச்சினை

சுற்றுலாத்துறை மந்திரி ஆனந்த்சிங், வட கர்நாடகத்தை தனியாக பிரித்து புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த விஷயங்களில் பா.ஜனதா தனது நிலையை தெளிவாக விளக்கி இருக்க வேண்டும். தனக்கு காங்கிரசார் கல்லறை கட்டுவதாக கர்நாடகத்திற்கு வந்து பிரதமர் மோடி பேசுகிறார். அவருக்கு எதிராக சதி செய்கிறவர்கள் யார்?.

பிரதமர் கர்நாடகம் வரும்போது மராட்டியம் அடிக்கடி எழுப்பும் எல்லை பிரச்சினை குறித்து ஏன் பேசுவது இல்லை. நடிகர் சுதீப் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதாக கூறியுள்ளார். இதை தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் பா.ஜனதா அரசு மீது 40 சதவீத கமிஷன் உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. இதுகுறித்து அவர் யோசித்து இருக்க வேண்டும்.

அர்த்தம் இல்லை

நடிகர் சுதீப்பின் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்க மாட்டோம். ஆனால் அவர் தேர்தலை மையப்படுத்தும் படத்தில் நடித்திருந்தால், அதற்கு தடை விதிக்கலாம். வணிக ரீதியிலான படங்களுக்கு தடை வேண்டும் என்பதில் அர்த்தம் இல்லை.

இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.

1 More update

Next Story