வேறொருவருடன் கள்ளத்தொடர்பு: பெண்ணை குத்திக்கொன்ற 2-வது கணவர் - பெங்களூருவில் பரபரப்பு


வேறொருவருடன் கள்ளத்தொடர்பு: பெண்ணை குத்திக்கொன்ற 2-வது கணவர் - பெங்களூருவில் பரபரப்பு
x

பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் பிடதி அருகே ஒசதின்னே கிராமத்தை சேர்ந்தவர் திவ்யா (வயது30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். முதல் கணவருடன் வாழ பிடிக்காமல், துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்த சாந்தகுமாரை திவ்யா 2-வது திருமணம் செய்து கொண்டு இருந்தார். பெங்களூருவில் உள்ள காமாட்சி பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் திவ்யாவும், சாந்தகுமாரும் வசித்து வந்தனர்.

கடந்த 7-ந்தேதி இரவு தனது வீட்டில் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் திவ்யா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். இந்தநிலையில், காமாட்சி பாளையா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திவ்யாவை கொலை செய்ததாக, அவரது 2-வது கணவர் சாந்தகுமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன் விவரம் பின்வருமாறு:-

துமகூரு மாவட்டம் பாவகடாவில் ஜோதிடராக சாந்தகுமார் இருந்து வந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு அவருக்கும் திவ்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பின்னர் 2 பேரும் சிக்கமகளூரு மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். தனது முதல் கணவரை பிரிந்த திவ்யா, ஒரு குழந்தையை மட்டும் தன்னுடன்அழைத்து வந்து காமாட்சி பாளையா பகுதியில் 2-வது கணவர் சாந்தகுமாருடன் வசித்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு சாந்தகுமார் சொந்த ஊரான பாவகடாவுக்கு சென்று விட்டார். இதனால் காமாட்சி பாளையாவில் திவ்யா தனியாக வசித்துள்ளார். அப்போது அவருக்கு 3-வது ஒரு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சாந்தகுமாருக்கு முதலில் தெரியவில்லை. சமீபத்தில் திவ்யா தனது செல்போன் தொலைந்து விட்டதாகவும், புதிய செல்போன் வாங்கி கொடுக்கும்படியும் சாந்தகுமாரிடம் கேட்டுள்ளார்.

அதன்படி, புதிய செல்போனை வாங்கி கொண்டு துமகூருவில் இருந்து சாந்தகுமார் பெங்களூருவுக்கு வந்துள்ளார். பின்னர் திவ்யாவை பார்த்து பேசிவிட்டு மீண்டும் அவர் துமகூருவுக்கு சென்றுவிட்டார். இதற்கிடையில், தான் வேறு வீட்டுக்கு செல்ல போவதாகவும் அதற்கு ரூ.20 ஆயிரம் கொடுக்கும்படியும் திவ்யா கேட்டுள்ளார். ஆனால் சாந்தகுமார் மறுத்து விட்டார்.

அதே நேரத்தில் திவ்யா காணாமல் போனதாக கூறிய செல்போனில் போட்டு இருந்த சிம் கார்டுக்கு தனது ஆவணங்களை கொடுத்து, அதே எண்ணில் சாந்தகுமார் சிம்கார்டு வாங்கி இருந்தார். இதுபற்றி திவ்யாவுக்கு தெரியவில்லை. கடந்த 6-ந் தேதி சாந்தகுமாரை தொடர்பு கொண்ட திவ்யா, ஆட்டோ டிரைவருக்கு ரூ.1,500 கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, ஆன்லைன் மூலமாக ஆட்டோ டிரைவருக்கு ரூ.1,500-யை சாந்தகுமார் அனுப்பியுள்ளார். அதே நேரத்தில் திவ்யாவின் (சாந்தகுமாரிடம் உள்ளது) பழைய சிம் கார்டுக்கு ஒரு வாலிபர் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது நீங்கள் யார் என்று சாந்தகுமார் கேட்டுள்ளார். திவ்யாவின் கணவர் என்று அந்த வாலிபர் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தகுமார், வாலிபருடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் அந்த வாலிபரான திவ்யாவின் கள்ளக்காதலன், சாந்தகுமாரை தொடர்பு கொண்டு திவ்யாவை பேச வைத்துள்ளார். அப்போது திவ்யாவும் அந்த வாலிபரை தனது கணவர் எனக்கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாந்தகுமார், மறுநாள் (7-ந் தேதி) பாவகடாவில் இருந்தே கத்தியை வாங்கிவிட்டு பெங்களூருவுக்கு வந்துள்ளார்.

ஆனால் திவ்யா வேறு வீட்டுக்கு சென்றதால் பழைய வீட்டில் வேறு ஒரு நபர் வசித்துள்ளார். இதையடுத்து, ஆட்டோ டிரைவருக்கு ரூ.1,500 ஆன்லைன் (போன்பே செயலி) மூலம் அனுப்பியதால், அவரை தொடர்பு கொண்டு திவ்யா புதிதாக வாடகைக்கு இருக்கும் வீட்டின் முகவரியை கேட்டுள்ளார். அந்த ஆட்டோ டிரைவரும் திவ்யாவின் வீட்டு முகவரியை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு திவ்யாவின் வீட்டு முகவரியை கண்டுபிடித்த சாந்த குமார், 7-ந் தேதி இரவு அங்கு வந்து திவ்யாவை கத்தியால் குத்திக் கொலை செய்ததும், பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. கைதான சாந்தகுமார் மீது காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story