சிறையில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்: ஆந்திரா முழுவதும் போராட்டம்
தனது கைதை கண்டித்து, ராஜமுந்திரி மத்திய சிறையில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் இருந்தார்.
விஜயவாடா,
ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, கடந்த மாதம் 9-ந் தேதி கைது செய்யப்பட்டார்.
அவரது ஆட்சிக்காலத்தில் நடந்ததாக கூறப்படும் திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல், 5-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உண்ணாவிரதம்
இதற்கிடையே, சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து, காந்தி ஜெயந்தி நாளில், சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்தது.
அதன்படி, நேற்று ஆந்திரா முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் இருந்தார்.
மனைவி, மகன்
அவருடைய மனைவி புவனேஸ்வரி, ராஜமுந்திரியில் ஒரு குவாரி மையத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அவருடன் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் அனிதா, மூத்த தலைவர் நன்னபேனி ராஜகுமாரி உள்ளிட்டோரும் உண்ணாவிரதம் இருந்தனர்.
சந்திரபாபு நாயுடுவின் மகனும், கட்சியின் பொதுச்செயலாளருமான நாரா லோகேஷ், டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தார்.
கட்சியின் மாநில தலைவர் அட்சயா நாயுடு, கட்சி அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.
டெல்லியில் கனகமேடலா ரவீந்திரகுமார் எம்.பி. வீட்டில் கட்சியின் எம்.பி.க்கள் பட்டினி போராட்டத்தில் பங்கேற்றனர்.