நான் ராஜினாமா செய்யவில்லை - விமர்சனத்திற்கு இமாச்சல் முதல்-மந்திரி மறுப்பு


நான் ராஜினாமா செய்யவில்லை - விமர்சனத்திற்கு இமாச்சல் முதல்-மந்திரி மறுப்பு
x

இமாச்சல பிரதேசத்தில் விக்ரமாதித்யா சிங் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்லா,

இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும், 25 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட பா.ஜ.க.வுக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியும், 3 சுயேச்சைகள் வாக்களித்ததாலும் பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றார்.

இது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பா.ஜ.க. தலைவர் ஜெய்ராம் தாகூர் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை கவர்னரை சந்தித்தனர். அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற சபாநாயகர் கவர்னரை சந்தித்து பேசினார். இதையடுத்து இமாச்சல பிரதேசத்தில் விக்ரமாதித்யா சிங் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் காங்கிரஸ் தலைவர் வீரபத்ர சிங்கின் மகன் ஆவார்.

மாநிலங்களவை தேர்தல் தோல்வி மற்றும் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இல்லாதது போன்ற காரணங்களால் முதல்-மந்திரி பதவியை சுக்விந்தர் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சுக்விந்தர் சிங் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்-மந்திரி கூறுகையில், "நான் ஒரு போராளி. நான் ஒரு எளிய குடும்பத்தை சேர்ந்தவன். நான் ஒன்றை மிகவும் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யவில்லை. மாநிலங்களவை தேர்தலில் மாறி வாக்களித்த சில எம்.எல்.ஏ.க்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும். இடையூறுகளை எதிர்த்து சண்டையிட்டு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்போம்" என்று கூறியுள்ளார்.

இந்த தொடர் திருப்பங்களால் இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.


Next Story