காவிரி நீர் விவகாரத்தில் பிரதமரை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை; பசவராஜ் பொம்மை பேட்டி


காவிரி நீர் விவகாரத்தில் பிரதமரை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை; பசவராஜ் பொம்மை பேட்டி
x

காவிரி நீர் விவகாரத்தில் பிரதமரை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

காவிரி நீர் விவகாரத்தில் பிரதமரை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை என்று முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

தயாராக இல்லை

காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் கா்நாடக அரசு, கடந்த 12-ந் தேதிக்கு பிறகு தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாது என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் அல்லவா?. அரசின் பிரமாண பத்திரம் என்பது சிறிய விஷயம் கிடையாது. சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு பொய் சொல்கிறது. மாநில அரசை இக்கட்டான சூழ்நிலைக்கு சிக்க வைப்பதாக என்(பசவராஜ் பொம்மை) மீது டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசை இக்கட்டில் சிக்க வைப்பதால் எனக்கு எந்த பயனும் இல்லை. அதற்கான அவசியம் எனக்கு இல்லை. கர்நாடக அரசின் முடிவு, மக்களை இக்கட்டில் சிக்க வைத்துள்ளது. கர்நாடகத்தின் நலன் கருதி அரசுக்கு நான் ஆலோசனை கூறியுள்ளேன். ஆனால் எனது ஆலோசனையை ஏற்க அரசு தயாராக இல்லை. அரசை நடத்துகிறவர்களுக்கு பொறுப்பு இருக்க வேண்டும்.

தண்ணீர் திறக்கவில்லை

வக்கீல்கள் எப்போதும் தண்ணீர் திறக்குமாறு கூறுவார்கள். ஆனால் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது அதை மாற்றினோம். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இரவோடு இரவாக தண்ணீர் திறக்கவில்லை. இந்த அரசு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை பின்பற்றிய பிறகு சுப்ரீம் கோர்ட்டில் கூறுவதில் என்ன பயன் உள்ளது?. தற்போது பிரதமரை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை.

1990-ம் ஆண்டுக்கு முன்பே இந்த விவகாரம் குறித்து பிரதமரிடம் விவாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரிடம் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் பிரதமரை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவை அழைத்து செல்வதாக இந்த அரசு சொல்கிறது. நமது வக்கீல்கள், தமிழத்தின் தற்போதைய நீர் தேவை, அது பயன்படுத்திய நீரின் அளவு குறித்து சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினை தீராது.

ஒத்துழைப்பு வழங்கவில்லை

காவிரி பிரச்சினையில் இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தேவேகவுடா கூறியுள்ளார். ஆனால் இதற்கு தமிழகம் ஒத்துழைக்காது. ஆரம்பம் முதலே அந்த மாநிலம் ஒத்துழைப்பு வழங்கவில்லை. எங்கள் கட்சி எம்.பி.க்கள் ஜல்சக்தித்துறை மந்திரியை நேரில் சந்தித்து மனு வழங்க உள்ளனர். நாடாளுமன்றம், சட்டசபைகளில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்திருப்பது புரட்சிகரமான முடிவு.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story