இந்திய அரசியலிலேயே மிகப்பெரிய ஊழல் குடும்பம், சோனியாகாந்தி குடும்பம்தான் - பா.ஜனதா
ராபர்ட் வதேராவின் மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நிராகரித்ததை மேற்கோள் காட்டி, "இந்திய அரசியலில் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பம்" என்று சோனியா காந்தி, ராகுல் காந்தியை பாஜக விமர்சித்துள்ளது.
இந்திய அரசியலிலேயே மிகப்பெரிய ஊழல் குடும்பம், சோனியாகாந்தி குடும்பம்தான் என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
ராபர்ட் வதேரா மனு தள்ளுபடி
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்ற விசாரணை நடத்தி வருகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் வதேராவுடன் தொடர்புடைய நிறுவனம் நிலம் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக இந்த விசாரணை நடக்கிறது.
இந்த விசாரணையை ரத்து செய்யக்கோரி, ராபர்ட் வதேரா தாக்கல் செய்த மனுவை ராஜஸ்தான் ஐகோர்ட்டு கடந்த வாரம் தள்ளுபடி செய்தது.
மவுனம் கலைக்க வேண்டும்
இந்தநிலையில், இதுகுறித்து பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் கவுரவ் பாட்டியா அளித்த பேட்டியில் கூறியதாவது:- மத்தியிலும், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ராபர்ட் வதேரா சட்டவிரோத பண பரிமாற்ற மோசடியில் சிக்கி உள்ளார். இப்பிரச்சினையில் சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் மவுனத்தை கலைக்க வேண்டும்.
இதை பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்வது தவறு. ராபர்ட் வதேரா மீதான விசாரணையை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுத்திருப்பதால், நீதித்துறை மீது அவதூறு கூறுவது போன்றது.
ஊழல் குடும்பம்
இந்திய அரசியலிலேயே மிகப்பெரிய ஊழல் குடும்பம், சோனியாகாந்தி குடும்பம். ஊழல் செய்வதும், நிலத்தை பறித்து ராபர்ட் வதேராவிடம் ஒப்படைப்பதும்தான் அந்த குடும்பத்தின் வேலை. அந்த குடும்பத்தில் 3 பேர், ஊழல் வழக்குகளில் ஜாமீனில் உள்ளனர். ஊழலை சிறிதும் சகித்துக்கொள்ளாத மத்திய அரசுக்கு இது கவலைக்குரிய விஷயம்.
இவ்வாறு அவர் கூறினார்.