பா.ஜ.க.வால் என்னுடைய குரலை ஒடுக்க முடியாது - ராகுல்காந்தி


பா.ஜ.க.வால் என்னுடைய குரலை ஒடுக்க முடியாது - ராகுல்காந்தி
x

தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று அரசியல் சட்டத்தை மாற்றினால் நாடு தீப்பற்றி எரியும் என்று ராகுல் காந்தி கூறினார்.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து ராம்லீலா மைதானத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-

காங்கிரசின் அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. போஸ்டர் அடிப்பது உள்ளிட்ட வேலைகள் உள்ள நிலையில், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தேர்தலில் பிரதமர் மோடி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுகிறார்.

எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறையை வைத்து நாட்டை நடத்த முயற்சிக்கிறார்கள். வரும் தேர்தலில் போட்டியிட விடாமல் என்னை தடுக்க பா.ஜ.க. சதி செய்கிறது. வங்கி கணக்கு முடக்கம், மாநில முதல்-மந்திரிகள் கைது என ஜனநாயக விரோத போக்கை பா.ஜ.க. மேற்கொள்கிறது.

பா.ஜ.க.வால் என்னுடைய குரலை ஒடுக்க முடியாது. இந்திய அரசியல் சட்டம் ஏழைகளுக்கு உரிமைகள் வழங்கியிருக்கிறது. ஈவிஎம் இல்லாமல் பா.ஜ.கவால் 180 இடங்களை கூட வெல்ல முடியாது. தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று அரசியல் சட்டத்தை மாற்றினால் நாடு தீப்பற்றி எரியும். இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்காவிட்டால் அரசியல் சாசனம் சிதைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story