"மோடியின் குடும்பம்" என்று எக்ஸ் கணக்குகளில் பெயரை மாற்றும் பா.ஜ.க.வினர்


மோடியின் குடும்பம் என்று எக்ஸ் கணக்குகளில் பெயரை மாற்றும் பா.ஜ.க.வினர்
x

பிரதமருக்கு குழந்தை இல்லை என்றும், இந்து இல்லை எனவும் லாலு பிரசாத் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தங்களது எக்ஸ் கணக்கில், 'மோடியின் குடும்பம்' என்ற வாசகத்தை இணைத்துள்ளனர்.

முன்னதாக நேற்று பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் உரையாற்றிய லாலு பிரசாத் யாதவ்,"நரேந்திர மோடிக்கு ஒரு குடும்பம் இல்லை. ராமர் கோயிலின் பெருமையை பேசும் மோடி முதலில் இந்து கிடையாது. அவரது தாய் இறந்தபோது அவர் மொட்டையடிக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது" என்றார்.

நாட்டில் வெறுப்புணர்வை மோடி பரப்பி வருகிறார். அவர் எப்போதும் வாரிசு அரசியலைப் பற்றிப் பேசுகிறார். எனவே, வாரிசு அரசியல் என்றால் என்ன என்பதையும், தனக்கு ஏன் குழந்தைகள் இல்லை என்பதையும் மோடி விளக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்து பேசினார். பிரதமருக்கு குழந்தை இல்லை என்றும், இந்து இல்லை எனவும் லாலு பிரசாத் பேசியது சர்ச்சையானது.

இந்நிலையில், பிரதமருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பா.ஜ.க. தேசியத் தலைவரில் தொடங்கி மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் என பலரும் தங்களது எக்ஸ் தளத்தில் 'மோடியின் குடும்பம்' என்ற வார்த்தையை தங்களது பெயருக்குப் பின்னால் இணைத்துள்ளனர். அமித் ஷா, நட்டா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய மந்திரி நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், அனுராக் தாக்குர், முன்னாள் முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் 'மோடியின் குடும்பம்' வார்த்தையை இணைத்துள்ளனர்.

முன்பாக 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போது சவுக்கிதார் மோடி என்ற வாசகத்தை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பாஜகவினர் சேர்த்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் மக்களவை தேர்தலுக்கான பரப்புரையை பா.ஜ.க. தலைவர்கள் தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.


Next Story