தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 1,300 கோடி நிதி பெற்ற பா.ஜ.க.; காங்கிரஸ் பெற்ற நிதி எவ்வளவு? - வெளியான தகவல்
பா.ஜ.க.வை விட 7 மடங்கு குறைவாகவே காங்கிரஸ் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளது.
டெல்லி,
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க ரொக்கத்திற்கு பதிலாக தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறும் வகையில் கடந்த 2017ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலையடுத்து சட்டமாக அமலுக்கு வந்தது.
இந்த புதிய சட்டப்படி இந்திய குடிமக்களோ அல்லது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமோ தேர்தல் பத்திரங்களை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம். கட்சிகள் அந்த பத்திரங்களை வங்கிக்கணக்கில் செலுத்தி பணமாக மாற்றிக்கொள்ளலாம்.
ஒருவர் தனியாகவோ அல்லது கூட்டு சேர்ந்தோ தேர்தல் பத்திரங்களை அளிக்கலாம். இந்த திட்டத்தில் நன்கொடை அளித்தவர் யார் என்பது தெரியாது. அதேவேளை, ஒவ்வொரு நிதியாண்டும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நிதி எவ்வளவு என்பது குறித்து அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். அந்த வகையில் கடந்த நிதியாண்டில் (2022-23) தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை நிதி தொடர்பான விவரத்தை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த நிதியாண்டில் தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. தேர்தல் பத்திரங்கள் மூலம் 1,300 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. காங்கிரஸ் தேர்தல் பத்திரங்கள் மூலம் 171 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் தேர்தல் பத்திங்கள் மூலம் பா.ஜ.க.வை விட 7 மடங்கு குறைவான நிதியே காங்கிரஸ் பெற்றுள்ளது.
மாநில கட்சிகளில் தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி தேர்தல் பத்திரங்கள் முலம் 34 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. அதேவேளை, பா.ஜ.க. தேர்தல் பத்திரங்கள் மூலம் 237 கோடி ரூபாய் வட்டியாக பெற்றுள்ளது. தேர்தல் மற்றும் பொது விளம்பர செலவுகள் தவிர்த்து விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை பயன்படுத்தியதற்காக மட்டும் 78 கோடி ரூபாய் பா.ஜ.க. செலவு செய்துள்ளது.