'கர்நாடகாவில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்' - எடியூரப்பா


கர்நாடகாவில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் - எடியூரப்பா
x
தினத்தந்தி 30 March 2023 11:11 AM GMT (Updated: 30 March 2023 11:12 AM GMT)

கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. 100 சதவீதம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ந்தேதி முடிவடைகிறது. இந்நிலையில் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் நேற்று அறிவித்தார்.

இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13-ந்தேதி தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13-ந்தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது.

அங்கு ஆட்சியைத் தக்கவைப்பதற்காக பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே ஜனதாதளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது.

அதுபோல் காங்கிரஸ் கட்சி 124 தொகுதிகளுக்கான தனது முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. பா.ஜனதா கட்சி வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பிரதமர் மோடியின் தலைமையில் நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். காங்கிரஸ் கட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. அதனால் தான் அவர்கள் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

பா.ஜ.க.வில் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் உள்ளனர். அவர்களை கர்நாடக மக்கள் வரவேற்கிறார்கள். எனவே கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. 100 சதவீதம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்."

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story