ராஜஸ்தான், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் பற்றி பா.ஜனதா ஆலோசனை - ஜே.பி.நட்டா, அமித்ஷா பங்கேற்பு


ராஜஸ்தான், சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் பற்றி பா.ஜனதா ஆலோசனை - ஜே.பி.நட்டா, அமித்ஷா பங்கேற்பு
x

கோப்புப்படம்

ராஜஸ்தான், சத்தீஷ்கார் மாநில சட்டசபை தேர்தல் குறித்து பா.ஜனதா மேலிடம் ஆலோசனை நடத்தியது. ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் முன்னிலையில் இந்த ஆலோசனை நடந்தது.

புதுடெல்லி,

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான், சத்தீஷ்கார் உள்பட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதற்கு முக்கிய அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

அந்த மாநிலங்களுக்கான பா.ஜனதாவின் தேர்தல் வியூகத்தை வகுப்பதற்காகவும், தேர்தல் தொடர்பான பிரச்சினைகளை விவாதிப்பதற்காகவும் மையக்குழு ஒன்றை பா.ஜனதா மேலிடம் அமைத்துள்ளது. அந்த மையக்குழுவின் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா தலைமை தாங்கினார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் ஆலோசனை நடந்தது.

மத்திய மந்திரிகள்

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், ராஜஸ்தான் மாநில பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பிரகலாத் ஜோஷி, இணை பொறுப்பாளர் குல்தீப் பிஷ்னோய், முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, மாநில பா.ஜனதா தலைவர் சி.பி.ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்தலுக்கு தயாராவது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. காங்கிரசுக்கு எதிராக, கட்சியின் வேட்பாளர்களாக யார் யாரை நிறுத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டது.

சத்தீஷ்கார் மாநில சட்டசபை தேர்தல் பற்றிய மையக்குழு கூட்டத்தில், அம்மாநில பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா, மாநில பா.ஜனதா தலைவர் அருண் சாவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சத்தீஷ்கார் சட்டசபை தேர்தலுக்கான பா.ஜனதா வேட்பாளர்கள் தேர்வு பற்றி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், பா.ஜனதாவின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. தேர்தல் குழுவில், பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள் சிலர் இடம் பெற்றுள்ளனர்.


Next Story