சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு? - காங்கிரஸ், ஆம் ஆத்மி பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ


சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு? - காங்கிரஸ், ஆம் ஆத்மி பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ
x

சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளன.

சண்டிகர்,

பஞ்சாப் - அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் உள்ளது. இதனிடையே, சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த 18ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் தொடர்பாக பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு சண்டிகர் மேயர் தேர்தலை ஜன.30ம் தேதி (இன்று) நடத்தும்படி உத்தரவிட்டது.

கோர்ட்டு உத்தரவையடுத்து சண்டிகர் மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. மேயர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர்.

வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடைபெற்றது. மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகளை தேர்தல் நடத்தும் அதிகாரி எண்ணினார். காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் 20 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார்.

ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் சிங் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கும், பா.ஜ.க. வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி சண்டிகர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக இரு கட்சிகளும் வீடியோ வெளியிட்டுள்ளன.

அந்த வீடியோவில், மேயர் தேர்தலில் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கும் முன்பு தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டுகளை எண்ணும்போது அதில் ஏதோ எழுதுவது போன்று பதிவாகியுள்ளது. வீடியோவை பகிர்ந்த இரு கட்சிகளும், மேயர் தேர்தலில் தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேட்டில் ஈடுபடுவது தெளிவாக தெரியவந்துள்ளது, பா.ஜ.க. ஜனநாயகத்தை கொலை செய்துவிட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளன.

தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ எழுதும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் சண்டிகர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு விழுந்த 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அக்கட்சி சார்பில் பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story