அன்னபாக்ய திட்டத்திற்கு அரிசி வழங்கும் விவகாரம்; கர்நாடக மாநிலம் முழுவதும் காங்கிரஸ் - பா.ஜனதா போட்டி போராட்டம்


அன்னபாக்ய திட்டத்திற்கு அரிசி வழங்கும் விவகாரம்; கர்நாடக மாநிலம் முழுவதும் காங்கிரஸ் - பா.ஜனதா போட்டி போராட்டம்
x

அன்னபாக்ய திட்டத்திற்கு அரிசி வழங்க மறுத்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து நேற்று கர்நாடகம் முழுவதும் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுபோல் பா.ஜனதாவினர் போட்டி போராட்டம் நடத்தினார்கள். இதில் முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் மந்திரி ஆர்.அசோக் உள்ளிட்ட பா.ஜனதாவினர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

அன்னபாக்ய திட்டம்

கர்நாடக காங்கிரஸ் அரசு, 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதில் ஒன்றான அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் கடந்த 11-ந் தேதி தொடங்கப்பட்டது. அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம் வருகிற 1-ந் தேதி தொடங்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. இதற்கு தேவையான கூடுதல் அரிசியை வழங்குமாறு இந்திய உணவு கழகத்திடம் கர்நாடக அரசு கேட்டது. அதற்கு அந்த கழகம், முதலில் அரிசி வழங்குவதாக கூறிவிட்டு மறுநாளே அரிசி வழங்க இயலாது என்று கூறி மறுத்துவிட்டது.

இதனால் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய முதல்-மந்திரி சித்தராமையா, அரிசி வழங்குவதில் மத்திய அரசு அரசியல் செய்வதாக பகிரங்கமாக குற்றம்சாட்டினார். மத்திய அரசு அரிசி வழங்க மறுத்த நிலையில் 10 கிலோ அரிசி திட்டத்தை தொடங்குவதில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரிசி வழங்காததால் மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 20-ந் தேதி(நேற்று) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அனைத்து தலைநகரங்களிலும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

10 கிலோ அரிசி

பெங்களூரு சுதந்திர பூங்காவில் நடைபெற்ற காங்கிரசின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டார். இதில் போக்குவரத்து மந்திரி ராமலிங்கரெட்டி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் அபிஷேக் தத்ரா உள்பட கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

அன்னதானத்தை விட சிறந்த தானம் வேறு எதுவும் இல்லை. பசி இல்லாத கர்நாடகத்தை உருவாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். அதனால் ஏழை குடும்பங்களை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் மாதம் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம். ஆனால் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு குறுக்கீடு செய்கிறது. மத்திய அரசு அரிசி ஒதுக்காவிட்டாலும், நாங்கள் வேறு மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்து வழங்குவோம்.

நாடாளுமன்ற தேர்தல்

அரிசி வழங்க மறுத்து அரசியல் செய்யும் பா.ஜனதாவுக்கு வருகிற உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். நாங்கள் இலவசமாக அரிசி வழங்குங்கள் என்று கேட்கவில்லை. காங்கிரஸ் மீது மக்களுக்கு கோபம் வர வேண்டும் என்பதற்காக பா.ஜனதாவினர் இவ்வாறு செய்கிறார்கள். 10 கிலோவுக்கு குறைவாக அரிசி வழங்கினால், நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று பா.ஜனதா தலைவர்கள் சொல்கிறார்கள்.

அனைவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக பா.ஜனதாவினர் கூறினர். அது என்ன ஆனது?. இளைஞர்களுக்கு வேலை வழங்காதது ஏன்?. இதற்கு பா.ஜனதாவினர் முதலில் பதிலளிக்க வேண்டும். நாங்கள் தவறு செய்தால் அதை எடுத்துக்கூறி சரிசெய்தால் அதை வரவேற்போம். பா.ஜனதாவினர் கூறியது போல் நல்ல நாட்கள் வரவில்லை.

வாக்குறுதியை நிறைவேற்றுவோம்

மத்திய அரசின் ஏழைகள் விரோத கொள்கையை கண்டித்து நாங்கள் போராட்டம் செய்கிறோம். ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது என்பது காங்கிரசின் விருப்பம். மத்தியில் காங்கிரஸ் அரசு இருந்தபோது, கர்நாடகத்திற்கு அரிசி உள்பட உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. அதனால் நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்.

5 உத்தரவாத திட்டங்களில் ஒன்றை நிறைவேற்றிவிட்டோம். மீதமுள்ள 4 திட்டங்களையும் நிறைவேற்ற இருக்கிறோம். சக்தி திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் ஒரு வாரத்தில் 3.30 கோடி பெண்கள் இலவசமாக பயணித்துள்ளனர். கிரகஜோதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. யாரும் அவசரப்பட வேண்டாம். பொறுமையாக விண்ணப்பித்து அதன் பயனை பெற வேண்டும். பூத் மட்டத்தில் நமது கட்சியினர் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவங்களை நிரப்ப வேண்டும். இதற்காக யாரும் பணம் வாங்கக்கூடாது.

கிரகலட்சுமி திட்டம்

இந்த திட்டத்தின் பயன் வேண்டாம் என்று விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்க தேவை இல்லை. கிரகலட்சுமி திட்டம் வருகிற ஆகஸ்டு மாதம் தொடங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பிக்க தனியாக ஒரு செயலியை உருவாக்கி வருகிறோம். விரைவில் அதை வெளியிட உள்ளோம். மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை நமது தொண்டர்கள் தாலுகா அளவில் நடத்தி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்கள் தங்களின் கைகளில் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

முன்னாள் முதல்-மந்திரி

இதற்கிடையே கர்நாடக காங்கிரஸ் அரசு அறிவித்தபடி வருகிற 1-ந் தேதி முதல் பி.பி.எல். ரேஷன் கார்டுதாரர்களுக்கு அன்னபாக்ய திட்டத்தின் கீழ் தலா 10 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்று பா.ஜனதா கூறி வந்தது. இதை வலியுறுத்தி 20-ந் தேதி(நேற்று) கர்நாடகம் முழுவதும் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று கர்நாடகம் முழுவதும் காங்கிரசாருக்கு போட்டியாக பா.ஜனதாவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மந்திரி ஆர்.அசோக் உள்பட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கைது

அவர்கள் காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். அதற்கு முன்பு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வருகிற 1-ந் தேதி முதல் ஏழைகளுக்கு தலா 10 கிலோ அரிசியை இலவசமாக வழங்குவதாக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார். அதன்படி ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அவர்களுக்கு மாதம் 50 கிலோ அரிசி வழங்க வேண்டும். இந்த பணியை செய்யாமல் காங்கிரசார் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த போராட்டம் நடத்துவதற்காக தான் மக்கள் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தார்களா?.

மின் கட்டணம்

இது பொய் பேசும் அரசு. பொய் பேசுவது மற்றும் ஏமாற்றுவது தான் இந்த அரசின் நோக்கம். காங்கிரசாருக்கு வெட்கம் இல்லையா?. இது பொறுப்பற்ற அரசு. மக்களுக்கு இந்த அரசு மின்சார 'ஷாக்' கொடுத்துள்ளது. வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வந்துள்ள கட்டணத்தை யாராலும் செலுத்த முடியாது. அந்த அளவுக்கு மின் கட்டணம் மிக அதிகமாக உள்ளது.

மின் கட்டணத்தை அதிகளவில் உயர்த்திவிட்டனர். ஏழைகளின் நலன் குறித்து பேசி ஆட்சிக்கு வந்த காங்கிரசார் இப்போது அந்த மக்களை ஏமாற்றுகிறார்கள். வரும் நாட்களில் பஸ்களின் சேவையும் நிறுத்தப்படும். ஏற்கனவே பள்ளி குழந்தைகள் பஸ்கள் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். கிராமப்புறங்களில் மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.

தடம் புரண்டுவிட்டது

ஒரே மாதத்தில் கர்நாடகம் வளர்ச்சி பாதையில் இருந்து தடம் புரண்டுவிட்டது. கமிஷன் பெற மந்திரிகள் திட்டமிடுகிறார்கள். இது மக்கள் விரோத, விவசாயிகள் விரோத அரசு. எங்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதை பாா்க்கும்போது, போலீஸ் மாநிலமாக கர்நாடகம் மாறிவிட்டது. இதற்கு நாங்கள் பயப்பட மாட்டோம். இந்த அரசின் தவறான முடிவுகளை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

காங்கிரஸ் அரசு 10 கிலோ அரிசி கொடுப்பதாக கூறினர். ஆனால் இப்போது மத்திய அரசு அரிசி கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். மத்திய அரசு தனது பங்கு அரிசியை கர்நாடகத்திற்கு ஒதுக்கி கொண்டு தான் உள்ளது. இந்த அரசின் பொய் வாக்குறுதிகளை கவனித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story