சீனாவுடனான எல்லை விவகாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்; மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்


சீனாவுடனான எல்லை விவகாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்; மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 May 2023 6:45 PM GMT (Updated: 30 May 2023 6:45 PM GMT)

சீனாவுடனான எல்லை விவகாரம் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பெங்களூரு:

சீனாவுடனான எல்லை விவகாரம் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அத்துமீறல் நீங்கவில்லை

ஒரு நல்ல அரசின் செயல்பாடுகள் 5 அளவுகோல் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. அதாவது இந்தியாவின் புற பாதுகாப்பு, பொருளாதார நிலை, சமூக ஒற்றுமை, உள்நாட்டு பாதுகாப்பு, உலக நாடுகளுடனான இந்தியாவின் உறவு அல்லது வெளியுறவு கொள்கை ஆகிய 5 அம்சங்கள் அடிப்படையில் நாட்டின் செயல்பாடு எப்படி உள்ளது என்பது மதிப்பிடப்படுகிறது.

கடந்த 9 ஆண்டுகளில் இவற்றில் ஒவ்வொரு அம்சத்திலும் மத்திய என்.டி.ஏ-பா.ஜனதா அரசு சிறப்பாக செயல்படவில்லை. இந்தியா இன்று நாட்டின் வெளிப்புற பாதுகாப்பு விஷயத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இந்திய எல்லைக்குள் நடைபெற்று வரும் சீன ராணுவத்தின் அத்துமீறல் நீங்கவில்லை.

பாதுகாப்பு மண்டலங்கள்

இந்திய எல்லையில் பாதுகாக்கப்பட்ட மண்லடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு தனது எல்லை விஷயத்தில் இந்தியாவின் நிலை என்ன?. சீனா நாட்டுடனான மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்காதது துரதிருஷ்டம். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எம்.பி.க்கள் கேட்ட கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை.

சீன-இந்திய எல்லையில் நிலைமை எப்படி உள்ளது, எத்தனை பாதுகாக்கப்பட்ட மண்டலங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன, அதில் எத்தனை மண்டலங்கள் இந்திய எல்லைக்குள் உள்ளன, இந்தியா தனது எல்லைகளை எந்த அளவுக்கு இழந்துள்ளது என்பது உள்ளிட்ட அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய அரசு உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்திய எல்லையில் 65 ரோந்து பகுதிகள் உள்ளன. அதில் 26 பகுதிகளில் ரோந்து செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்துள்ளது.

சார்க் மாநாடு

நாம் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதியை இழந்துள்ளோம். ஐக்கிய நாடுகள் கவுன்சிலில் நிரந்தர இடம் பெற கடந்த 9 ஆண்டுகளில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. அணு வினியோக குழுவில் இந்தியாவுக்கு உறுப்பினர் பதவி கிடைக்காதது ஏன்?. 2015-ம் ஆண்டில் இருந்து சார்க் மாநாடு நடத்தாதது ஏன்?.

இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. சீனா-ரஷியா உறவு அதிகரித்து வருவதை தடுக்க இந்தியாவிடம் ஏதாவது மாற்று திட்டம் உள்ளதா?. மணிப்பூரில் கலவரம் வெடித்துள்ளது. பல நாட்கள் ஆன பிறகு இப்போது தான் உள்துறை மந்திரி அந்த மாநிலத்திற்கு செல்வதாக கூறியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை

காஷ்மீரில் தேர்தல் நடத்த மத்திய அரசுக்கு பயம் ஏன்?. பணவீக்கம் அதிகரித்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. வாக்குகளை பெறும் நோக்கத்தில் மத மோதல் விஷயங்களை தொடர்ந்து ஏற்படுத்துகிறார்கள். இதற்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்ற கா்நாடகம் சிறந்த உதாரணம்.

கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளில் நல்ல நிலை ஏற்படவில்லை. கர்நாடக மக்கள் அறிவுப்பூர்வமாக தேர்தலில் வாக்களித்துள்ளனர். அதே போல் அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் நாட்டு மக்கள் அறிவுப்பூர்வமாக வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு மணிஷ் திவாரி கூறினார்.


Next Story