கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் நிர்வாக மையம்; கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவு


கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்   பேரிடர் நிர்வாக மையம்; கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவு
x

கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களில் மாவட்ட பேரிடர் நிர்வாக மையம் அமைக்கும்படி கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களில் மாவட்ட பேரிடர் நிர்வாக மையம் அமைக்கும்படி கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

பேரிடர் நிர்வாக மையம்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற கலெக்டர்கள் கூட்டத்தில் பசவராஜ் பொம்மை சில உத்தரவுகளை பிறப்பித்தார். கூட்டத்தின் இறுதியில் அவர் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் மழையால் சேதம் அடைந்த வீடுகள் குறித்த விவரங்களை வழங்குவதற்கான காலக்கெடு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் மாவட்ட பேரிடர் நிர்வாக மையம் அமைக்க அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை அடுத்த ஒரு மாதத்திற்குள் அமைக்க வேண்டும்.

வருவாய் கிராமங்கள்

மழை வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏரிகள் மற்றும் கால்வாய்களை நில அளவீடு செய்து வெள்ளத்தை தடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர், உதவி கலெக்டர் மற்றும் தாசில்தார் கோர்ட்டுகளில் உள்ள வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காணும் நோக்கத்தில் பிற அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படும். 3 ஆயிரத்து 247 குக்கிராமங்கள், புதிய வருவாய் கிராமங்களாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 ஆயிரத்து 180 குக்கிராமங்களை வருவாய் கிராமங்களாக தரம் உயர்த்துவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 984 கிராமங்களில் மக்களுக்கு நில உரிமை பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயுஸ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

நம்பிக்கை ஏற்படும்

வீட்டு வசதி திட்டங்களில் 5 லட்சம் வீடுகள் கட்டும் பணிகளை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். கலெக்டர்கள், மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உத்தரவிட வேண்டும். திடீரென ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் அதிகாரிகள் சுறுசுறுப்பாக பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு அரசு மீது நம்பிக்கை ஏற்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story