விவசாயிகள் போராட்டம்: போலீசாருடன் நடந்த மோதலில் ஒருவர் பலியானதால் பதற்றம்


விவசாயிகள் போராட்டம்: போலீசாருடன் நடந்த மோதலில் ஒருவர் பலியானதால் பதற்றம்
x

விவசாயி உயிரிழந்ததை தொடர்ந்து போராட்டத்தை 2 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக விவசாய சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

சண்டிகார்,

வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவர வேண்டும் மற்றும் வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் டெல்லி நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை கடந்த 13-ந் தேதி தொடங்கின.

ஆனால், பஞ்சாப்பில் இருந்து புறப்பட்ட விவசாயிகள், பஞ்சாப்-அரியானா இடையே ஷம்பு, கானாரி ஆகிய இடங்களில் உள்ள எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இரு இடங்களிலும் பல அடுக்கு தடுப்புகள் போடப்பட்டிருந்தன. தடுப்புகளை அகற்ற முயன்ற விவசாயிகள் மீது அரியானா போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். அதனால், அந்த எல்லை பகுதிகளிலேயே விவசாயிகள் டிராக்டர்களை நிறுத்தி, தங்கி விட்டனர்.

கடந்த 18-ந் தேதி, விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய மந்திரிகள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் 4-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பருப்புவகைகள், மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றை 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் மத்திய அரசு அமைப்புகள் கொள்முதல் செய்யும் என்று ஒரு திட்டத்தை முன்வைத்தனர்.

அதை பரிசீலிப்பதற்காக போராட்டத்தை விவசாயிகள் 2 நாட்கள் நிறுத்தி வைத்தனர். பரிசீலனைக்கு பிறகு, இந்த திட்டத்தை விவசாய சங்க பிரதிநிதிகள் நிராகரித்தனர். 21-ந் தேதியில் (நேற்று) இருந்து டெல்லி நோக்கி மீண்டும் படையெடுக்க போவதாக அறிவித்தனர்.

அதே சமயத்தில், விவசாயிகள் முன்னேறி வருவதை தடுக்க அரியானா, டெல்லி போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். இந்நிலையில், நேற்று பஞ்சாப்-அரியானா இடையிலான கானாரி எல்லையில் முகாமிட்டிருந்த விவசாயிகள், டெல்லி நோக்கி செல்வதற்காக தடுப்புகளை அகற்ற முயன்றனர்.

அப்போது, போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. அதில் 3 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஒரு விவசாயி உயிரிழந்தார். அவர் பெயர் சுப்கரன் சிங் என்றும், 21 வயதே ஆன அவர் பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டம் பலோக் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 5-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய சங்கங்களுக்கு மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் பஞ்சாப்-அரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்ததை தொடர்ந்து போராட்டத்தை 2 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக விவசாய சங்க தலைவர்கள் அறிவித்து உள்ளனர்.


Next Story