தனியார் கல்வி நிறுவனங்களில் போலீசார் சோதனை; 6,800 போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பறிமுதல்
பெங்களூருவில் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது சோதனை நடத்திய போலீசார் 6,800 போலி மதிப்பெண் சான்றிதழ்கள், 22 மடிக்கணினிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் தனியார் கல்வி நிறுவனங்கள் மீது சோதனை நடத்திய போலீசார் 6,800 போலி மதிப்பெண் சான்றிதழ்கள், 22 மடிக்கணினிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்வி நிறுவனங்களில் சோதனை
பெங்களூருவில் சில தனியார் கல்வி நிறுவனங்கள் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரித்து மோசடியில் ஈடுபடுவது பற்றி போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதுபற்றி விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டார். மேலும் இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார், பெங்களூரு ராஜாஜிநகர், ஜே.பி.நகர், பத்தரப்பா லே-அவுட், தாசரஹள்ளி, விஜயநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது அந்த கல்வி நிறுவனங்கள் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலி மதிப்பெண் சான்றிதழ்கள்
அதாவது கர்நாடகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் தவிர, பிற மாநிலங்களில் இருக்கும் பல்கலைக்கழங்களின் பெயரில் போலியாக மதிப்பெண் சான்றிதழ்களை தயாரித்து கொடுத்து, அந்த கல்வி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. ஒட்டு மொத்தமாக 15 பல்கலைக்கழங்களின் பெயர்களில் கல்வி நிறுவனங்கள் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரித்து வழங்கி வந்துள்ளன.
அதாவது ஒவ்வொரு மதிப்பெண் சான்றிதழுக்கும், ஒரு விலையை நிர்ணயித்து இருந்தார்கள். எல்லாவிதமான படிப்புகள் சம்பந்தப்பட்டதற்கும் மதிப்பெண்கள் சான்றிதழ்களை தயாரித்து கொடுத்துள்ளனர். படிக்காதவர்களுக்கு கூட, அவர்கள் பட்டப்படிப்பு படித்திருப்பது போன்று போலியாக மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரித்து கொடுத்து பணம் சம்பாதித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனை
ஒரு மதிப்பெண் சான்றிதழை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்து கல்வி நிறுவனங்கள் மோசடி செய்து வந்துள்ளன. இந்த சோதனையில் மொத்தம் 6,800 போலி மதிப்பெண் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர 22 மடிக்கணினிகள், 13 செல்போன்கள், போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்க பயன்படுத்திய ஆவணங்கள், முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மோசடியின் பின்னணியில் பெரிய கும்பலே இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். கூடிய விரைவில் மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் கூறினர்.
பிரதாப் ரெட்டி பார்வையிட்டார்
தனியார் கல்வி நிறுவனங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போலி மதிப்பெண் சான்றிதழ்கள், மடிக்கணினிகள், முக்கிய ஆவணங்கள் ஆகியவை பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலையில் வைக்கப்பட்டு இருந்தது.
அந்த சான்றிதழ்கள், மடிக்கணினிகளை போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனர் சரணப்பா பார்வையிட்டார்கள்.